இந்தியா

‘கெட்ட கனவுகள் வருது; தூங்க முடியவில்லை’-திருடிய கோயில் சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்!

‘கெட்ட கனவுகள் வருது; தூங்க முடியவில்லை’-திருடிய கோயில் சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்!

ச. முத்துகிருஷ்ணன்

உத்தரப் பிரதேசத்தில் சிலைத் திருடர்களுக்கு தொடர்ந்து கெட்ட கனவுகள் வந்ததால், திருடிய சிலைகளை மீண்டும் கோயிலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டம் தாரூஹா நகரில் உள்ள ஜெய் தேவதாஸ் அகாராவில் புகழ்பெற்ற பாலாஜி கோவில் ஒன்று உள்ளது. மே 9-ம் தேதி காலை பூசாரியின் மனைவி கோயிலுக்கு வந்து பார்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த சிலைகள் காணாமல் போனதைக் கண்டார். அதன்பின் கோவிலுக்கு வந்த பூசாரி மஹந்த் ராம் பாலக் தாஸ், அஷ்டதத்துகளால் செய்யப்பட்ட 5 கிலோ எடையுள்ள ஸ்ரீ ராமர் சிலை உட்பட பல லட்சம் மதிப்பிலான 16 சிலைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டறிந்தார்.

பூசாரி மஹந்த் ராம் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இருப்பினும், திருட்டு நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு மகாவீர் நகரில் உள்ள பூசாரி மஹந்த் ராம் வீட்டின் முன் திருடப்பட்ட சிலைகள் நிரப்பப்பட்ட ஒரு சாக்குப்பையை கிடந்ததால் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் ஏற்பட்டது. திருடப்பட்ட சிலைகளுடன், திருடர்கள் தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கோரி எழுதியதாகக் கூறப்படும் கடிதமும் அந்த பையில் இருந்தது.

கோவில் பூசாரிக்கு திருடர்கள் அனுப்பிய கடிதத்தில், தங்களுக்கு கெட்ட கனவுகள் வருவதாகவும், தூங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். எனவே, அவர்கள் சிலைகளை திருப்பி அனுப்பினர். கோவிலில் மீண்டும் சிலைகளை நிறுவ பூசாரியிடம் கோரிக்கை வைத்தனர். 16 சிலைகள் காணாமல் போன நிலையில் 14 சிலைகள் மட்டுமே அந்த சாக்குப்பையில் இருந்தது. இரண்டு அஷ்ட உலோக சிலைகள் இன்னும் காணவில்லை என்பதால் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.