இந்தியா

காவல்நிலையத்தை அடித்து நொறுக்கிய வன்முறை கும்பல்: போலீஸ் அதிகாரி பலி

காவல்நிலையத்தை அடித்து நொறுக்கிய வன்முறை கும்பல்: போலீஸ் அதிகாரி பலி

rajakannan

உத்தரபிரதேசத்தில் பசுக்கள் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்த நடைபெற்ற வன்முறையில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் பசுக்கள் சடலங்கள் கிடப்பதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து, கிராமத்திற்குள் ஒன்றுதிரட்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைகளை மறித்தனர். இந்தப் போராட்டம் குறித்து உள்ளூர் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். சாலையை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சரிசெய்ய முயன்றுள்ளனர். 

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திடீரென அப்பகுதியில் உள்ள சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, காவல் நிலையத்திற்கும் சென்று அவர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததை அடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், போராட்டத்தில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் ஒருவர் பலியானார். 

அமைதியை திரும்பும் நோக்கில் அந்தக் கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.