இந்தியா

உ.பி: மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த மகன்… வழக்குப் பதிவு செய்ய போராடும் பாஜக எம்எல்ஏ

உ.பி: மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த மகன்… வழக்குப் பதிவு செய்ய போராடும் பாஜக எம்எல்ஏ

Veeramani

உத்தரபிரதேச மாநிலம் பாஜக எம்.எல்.ஏ. ராஜ்குமார் அகர்வால், கொரோனா பாதித்த தனது மகன் மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக இறந்துவிட்டதாகவும், ஆனால் உத்தரபிரதேச காவல்துறை மருத்துவமனைக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டத்தில் சண்டிலா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால், தனது மகன் மரணம் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எதிராக புகார் அளிக்க ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகிறார். கோரொனாவால் பாதிக்கப்பட்ட அவரது மகன் ஆஷிஷ் (35) ஏப்ரல் 26 அன்று ககோரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இது தொடர்பாக பேசிய பாஜக எம்.எல்.ஏ ராஜ்குமார் அகர்வால் "ஏப்ரல் 26 காலை, என் மகனின் ஆக்ஸிஜன் அளவு 94 ஆக இருந்தது. அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார், எங்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென மாலையில், அவரது ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாக மருத்துவர்கள் சொன்னார்கள் நாங்கள் வெளியில் இருந்து ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்தோம், ஆனால் மருத்துவர்கள் அலட்சியம் காரணமாக ஆக்ஸிஜனை ஏற்ற ஏற்பாடு செய்யவில்லை, அதனால் அவர் இறந்தார். " என தெரிவித்தார். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக தனது மகன் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டிய அகர்வால், தனது மகனுக்கு நீதி கிடைக்க எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முயற்சிப்பதாகவும் கூறினார்.