இந்தியா

பணிக்கு வந்த முதல் நாளில் கூட்டு பாலியல் வன்கொடுமை - கொடூரமாக கொல்லப்பட்ட செவிலியர்

ச. முத்துகிருஷ்ணன்

உத்தரப் பிரதேசத்தில் பணிக்கு சென்ற முதல் நாளிலேயே செவிலியர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் துல்லாபூர்வா கிராமத்தில் நியூ ஜீவன் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை சில நாட்களுக்கு முன் ஏப்ரல் 25ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் திகானா கிராமத்தில் வசித்த 18 வயதேயான இளம்பெண் செவிலியர் பணியில் வெள்ளிக்கிழமை சேர்ந்துள்ளார். பணி நிமித்தமாக அன்றிரவு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார்.

அடுத்த நாள் காலை மருத்துவமனையின் பின்புறம் இரும்பு தடி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்து உள்ளார். அவரது கழுத்து பகுதியில் கயிறு சுற்றப்பட்டு இருந்தது. அவரது முகத்தில் முக கவசம் காணப்பட்டது. கைக்குட்டை போன்ற துணி ஒன்று அவரது கைகளில் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் தாயார் அளித்த புகாரின்பேரில் மருத்துவமனை ஊழியர் உட்பட மருத்துவமனையில் பணியாற்றிய 4 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு ஒன்று பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் யார் குற்றவாளி என்பதை சரியாக கண்டறிய இயலும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.