இந்தியா

பசி எடுக்கும்போது ஸ்பூன்களை சாப்பிட்ட இளைஞர்?! 62 ஸ்பூன்களை போராடி அகற்றிய மருத்துவர்கள்!

பசி எடுக்கும்போது ஸ்பூன்களை சாப்பிட்ட இளைஞர்?! 62 ஸ்பூன்களை போராடி அகற்றிய மருத்துவர்கள்!

ச. முத்துகிருஷ்ணன்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞரின் வயிற்றில் இருந்து 62 ஸ்பூன்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் மன்சூர்பூர் நகரத்தில் போபாடா கிராமத்தில் வசித்து வந்தவர் 32 வயதான இளைஞர் விஜய். இவர் கடுமையான வயிற்றுவலி காரணமாக முசாபர்நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றை அணுகியுள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவரது வயிற்றில் விசித்திரமாக சில பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். அவரது வயிற்றுவலிக்கு அது தான் காரணம் என்பதை உறுதி செய்த மருத்துவர்கள், இளைஞரின் ஒப்புதலைப் பெற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் துவங்கினர்.

அப்போது நோயாளியின் வயிற்றில் தலை இல்லாத ஸ்டீல் ஸ்பூன்கள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஒவ்வொரு ஸ்பூனாக மிகவும் கவனமாக அகற்றத் துவங்கினர். 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த அறுவை சிகிச்சையில் ஒட்டுமொத்தமாக 62 ஸ்பூன்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

தற்போது ஐ.சி.யு வில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனக்கு பசி எடுக்கும்போது உணவு கிடைக்காவிட்டால் ஸ்பூன்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.