இந்தியா

காதல் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிய ’நவீன ஷாஜகான்’ காலமானார்!

காதல் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிய ’நவீன ஷாஜகான்’ காலமானார்!

webteam

’உனக்காக அதை செய்வேன், இதை செய்வேன்’ என்று வாக்குறுதிகளை அள்ளிவிடும் இளம் காதலர்களுக்கு மத்தியில், தன் காதல் மனைவிக்கு, தாஜ்மஹாலை கட்டியவர் பைஸுல் ஹசன் கத்ரி. ஆக்ராவில் இருந்து சில நூறு கி.மீ தூரத்தில் உள்ள இவரது தாஜ்மஹால் பளிங்கு கற்களால் கட்டப்படவில்லை என்றாலும் காதல் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது வயற்காடுகளுக்கு நடுவே.


உத்தரபிரதேச மாநிலம் புலண்ட்ஷார் மாவட்டத்தில் உள்ள கேசர் கலன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த பைஸுல் ஹசன் கத்ரி. வயது 82. முன்னாள் தபால்காரர். இவரது காதல் மனைவி தாஜாமுல்லி பேகம். தொண்டை கேன்சர் காரணமாக, தனது 57 வது வயதில் அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார் பேகம். குழந்தை இல்லாத கத்ரியால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 
மறைந்த தன் காதல் மனைவிக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஷாஜகானும் தாஜ்மஹாலும் ஞாபகத்துக்கு வந்தனர். மறு யோசனை இன்றி களத்தில் இறங்கினார்.


தனது மனைவியின் கல்லறை அருகே, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைப் போல கட்ட முடிவு செய்தார். அதன்படி தனது சேமிப்பை எல்லாம் செலவு செய்து கட்டினார். பளிங்காக மின்னவில்லை என்றாலும் ஒரிஜினல் தாஜ்மஹாலின் வடிவத்தில் இதைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடித்தார். 

இதைக் கண்டு அந்த கிராமத்தினர் நவீன ஷாஜகான் என்றும் ஏழைகளின் ஷாஜகான் என்றும் அவரை அழைக்கத் தொடங்கினார். ஏழைகளின் ஷாஜகான் என்று அழைப்பதற்கு காரணம், தாஜ்மஹால் கட்டிய இடத்துக்கு அருகில் உள்ள தனது சில ஏக்கர் நிலத்தை பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் கட்ட அரசுக்கு அவர் கொடுத்ததுதான்!

இந்நிலையில் தாஜ்மஹால் கட்டுவதை பத்திரிகைகள் மூலம் அறிந்த அப்போதைய மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், தேவையான பணத்தை கொடுக்க முன் வந்தார். ஆனால், கத்ரி, ‘இது என் காதல் மனைவிக்கான தாஜ்மஹால். எனது சொந்தப் பணத்திலேயே இதைக் கட்ட வேண்டும்’ என்று மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அதைக் கட்டி முடித்துவிட்ட கத்ரி, தனது இறப்புக்குப் பிறகு தனது உடலையும் மனைவிக்கு அருகிலேயே புதைக்க வேண்டும் என்று கிராமத்தினரிடம் கூறி வந்தார். 

இந்நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் காயமடைந்த அவர் அலிகார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைய அவர் விரும்பியபடியே அவரது உடல் அவர் கட்டிய தாஜ்மஹாலில் புதைக்கப்படுகிறது.

(ஸ்கூல்)

இதுபற்றி கத்ரி வீட்டுக்கு அருகில் வசித்த முகமது அஸ்லாம் கூறும்போது, ‘கத்ரி, பள்ளி கட்டுவதற்கு இடம் கொடுத்தும், தாஜ்மஹால் கட்டியும் எங்கள் கிராமத்துக்கு பெயர் வாங்கி தந்தவர். நவீன ஷாஜகான் ஆன, அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டியது எங்களது கடமை. அதற்கான வேலைகளில் இருக்கிறோம்’ என்றார்.