அங்கித் அகர்வால்  pt web
இந்தியா

“லேட் நைட் பார்ட்டி சார்.. லீவ் வேணும்” - ஊழியருக்கு CEO கொடுத்த ஸ்வீட் பதில்!! வைரலான பதிவு

லேட் நைட் பார்ட்டிக்கு சென்றதால் விடுமுறை கேட்ட ஊழியருக்கு Unstop நிறுவனத்தின் CEO கொடுத்த பதில் தற்போது வைரல் ஆகியுள்ளது.

Angeshwar G

Unstop நிறுவனத்தின் CEO அங்கித் அகர்வால். இவர் சில தினங்களுக்கு முன் அவருக்கும் அவரது ஊழியருக்கும் இடையே நடந்த வாட்ஸ் ஆப் உரையாடலின் ஸ்கிரீன்ஸாட்டை LinkedInல் பகிர்ந்தார். தற்போது பெரும்பான்மையான நிறுவன ஊழியர்களின் பேசுபொருளாக மாறியுள்ளது இந்த ஸ்கிரீன் ஷாட்.

அங்கித் அகர்வால் பகிர்ந்துள்ள ஸ்கிரீன் ஷாட்டில் அவரது ஊழியர், அவரிடன் இரவு நேர பார்ட்டிக்கு சென்றுள்ளதால் விடுப்பு வேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உங்களிடம் லேட் நைட் பார்ட்டி லீவுக்குக் கோர விரும்புகிறேன். நான் ஒரு கச்சேரிக்கு போயிருந்தேன், பார்ட்டி இன்னும் இருக்கிறது. மன்னிக்கவும். நான் வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருப்பேன். மதியம் அனைத்து அணிகளுடனும் பேசிவிடுகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்துள்ள அங்கித் அகர்வால் அது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, “இன்று காலை எனது வாட்ஸாப்பிற்கு வந்த குறுஞ்செய்தி இது. பார்ட்டி இன்னும் முடியாததால் விடுப்பு கேட்கும் ஊழியர்..” என குறிப்பிட்டுள்ளார். மேலும் பதிவிட்டிருந்த அவர், “குழுவிற்குள் இந்த வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது, இதன் மூலம் நீங்கள் உங்கள் அணியை நம்பலாம், மேலும் நீங்கள் அவர்களை ஆதரிப்பீர்கள் என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

சக ஊழியர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது வசதியாக இருக்கும்போது, ​​அது சிறந்த தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த வெற்றிக்கு வழிவகுக்கும் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்குகிறது” என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவிற்கு கீழ் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பயனர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அல்லது அவர்கள் உயிரிழக்கும் வரை எங்களுக்கு விடுமுறைக்கான அனுமதி இல்லை. நாங்கள் விடுமுறைக்காக எங்கள் குடும்பத்தினரை இழந்தோம் என்று தான் சொல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சில எதிர்மறை கருத்துகளும் வந்தன. ஊழியர் விடுமுறைக்கான அனுமதி கேட்கவில்லை, விடுப்பு குறித்த தகவல் அளிக்கிறார் என்றும் இது மரியாதைக்குறிய செயல் அல்ல என்றும் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார்.