18 ஆவது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று எம்.பிக்களாக தற்காலிக சபாநாயகரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். எம்பியாக பதவியேற்றபோது தெலங்கானா எம்பி அசாதுதீன் ஓவைசி ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்டார்.
தொடர்ந்து ஜெய் பீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என குறிப்பிட்டார். இந்தியாவில் நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் நிகழ்வில்,பாலஸ்தீனத்தை குறிப்பிட்டு ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்டதற்கு பாஜக எம்பி மற்றும் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, “ஓவைசி பாரதமாதாக்கு ஜெய் என சொல்ல மறுக்கிறார், ஆனால் ஜெய் பாலஸ்தீனம் என கூறுகிறார். மக்கள் அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஓவைசியோ, “நான் சொன்னதில் என்ன தவறு. அரசியல் சாசனத்தில் அப்படி சொல்லக்கூடாது என எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. என்னைப்போலவே பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியதையும் கேட்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
உதாரணமாக தமிழ்நாட்டு எம்பிக்கள் பதவியேற்றபோது, முன்னாள், இந்நாள் முதல்வர்களைக் குறிப்பிட்டும், தமிழ்நாடு, தமிழ் வாழ்க என்றெல்லாம் குறிப்பிட்டு பதவியேற்றனர். ஆனால் ஓவைசி ஜெய் பாலஸ்தீன் என முழக்கமிட்டதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதைக் குறிப்பிட்டு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கிஷன்ரெட்டி, ஓவைசியை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.