இந்தியா

எல்லைக்குள் புகுந்து பதிலடி கொடுக்க முடியும் என்பதற்காகவே தாக்குதல்: அலுவாலியா

எல்லைக்குள் புகுந்து பதிலடி கொடுக்க முடியும் என்பதற்காகவே தாக்குதல்: அலுவாலியா

Rasus

விமானப் படை தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்கும் நிலையில், எதிரிகளின் எல்லைக்குள் புகுந்த பதிலடி கொடுக்க முடியும் என்பதை காட்டுவதற்காகவே விமானப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அப்பாவி மக்களை கொல்வது தங்கள் நோக்கம் அல்ல என்றும் தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை  பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. ஆனால் இதில் உயிரிழந்தவர்கள் விவரம் குறித்து விமானப் படையினர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகின. இதனிடையே விமானப் படை தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்களை மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் அலுவாலியா, எதிரிகளின் எல்லைக்குள் புகுந்த பதில் தாக்குதல் நடத்த முடியும் என்பதை காட்டுவதற்காக விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். அத்துடன் அப்பாவி மக்களை கொல்வது தங்கள் நோக்கம் அல்ல என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், “ பிரதமர் மோடியோ அல்லது அரசின் செய்தித் தொடர்பாளரோ, பாஜக தேசியத் தலைவரோ விமானப் படை தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் மீடியாக்களும், சமூக வலைதளங்களும் உறுதிப்படுத்தப்படாத புள்ளி விவரங்களாக 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறுகின்றன. அதற்கு நான் எப்படி உறுதி அளிக்க முடியும்” என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விமானப் படை தாக்குதலில் நடத்தி பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது என்ற நிலைப்பாட்டில் இருந்தும் அரசு பின்வாங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனிடையே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, விமானப் படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.