இந்தியா

பொன் ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த கேரளா போலீஸ் !

பொன் ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த கேரளா போலீஸ் !

webteam

கேரளாவில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது. இதனையடுத்து மண்டல பூஜைக்காக சபரிமலை நடை தற்போது திறக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். போலீசாரின் கிடுக்குப்பிடியால் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் சிரமம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சபரிமலை செல்வதற்காக இருமுடி கட்டியுள்ளார். கோயில் செல்ல நிலக்கல் சென்ற அவர் பம்பை செல்ல முயற்சித்துள்ளார். அப்போது பம்பைக்கு அமைச்சர் வண்டியை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவருடன் வருபவர்கள் கேரள அரசின் பேருந்தில் தான் பம்பைக்கு செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்துவிட்டனர். இதனால் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீசாருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, கேரள அரசு தேவையற்ற சிரமங்களை பக்தர்களுக்கு ஏற்படுத்துவதாக கூறினார். அரசு வாகனங்களை மட்டுமே பம்பைக்கு அனுமதிப்போம் என போலீசார் கடுமையாக நடந்துகொள்ள கூடாது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அரசு பேருந்தில் செல்ல முடிவு செய்த பொன்.ராதாகிருஷ்ணன், பம்பைக்கு தன் வண்டியில் செல்லாமல் அரசு பேருந்தில் சென்றார். பின்பு, சபரிமலை சன்னிதானம் சென்று சுவாமி ஐயப்பனை தரிசித்துவிட்டு, சன்னிதானம் பகுதியிலேயே படுத்து உறங்கினார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலை பொறுத்தவரை மண்டலப் பூஜை காலங்களில் காலை 4.30 மணி முதல் பகல் 12 மணி வரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். பக்தர்கள் இருமுடியில் கொண்டு செல்லப்படும் நெய் தேங்காயை ஐயப்பன் அபிஷேகத்துக்கு வழங்குவார்கள். ஐயப்பன் கோயிலின் மிக முக்கியமான சடங்கு இதுவே. எனவே பகல் 12 மணிக்கு மேல் செல்லும் பக்தர்கள் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு, நெய் அபிஷேகம் செய்வதற்காக மறுநாள் வரை காத்திருப்பார்கள். எனவே மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் நெய் அபிஷேகத்துக்காக கோயிலில் தங்கிவிட்டார்.

சபரிமலை கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு இன்று அதிகாலை திரும்பும் வழியில், பம்பை காட்டுப்பகுதியில் அவரது வாகனத்தை காவல்துறையினர் தடுத்துநிறுத்தினர். மத்திய அமைச்சர் என்று தெரிந்ததும் மன்னிப்பு கேட்டு காவல்துறையினர் கடிதம் கொடுத்தனர். இந்நிலையில், சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பியபோது பம்பையில் காட்டுப்பகுதி வழியே வாகனத்தில் வந்தபோது அவரது வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போதும் வாக்குவாதம் ஏற்பட்டது. மத்திய அமைச்சர் என்று தெரிந்ததையடுத்து மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக்கொடுத்தனர்.