உலகில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் வாட்ஸ்அப் செயலியும் முக்கிய அங்கம் வகிக்கிறது. அத்துடன், இந்தச் செயலியில் அவ்வப்போது புதுப்பிப்புகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் இந்தச் செயலியை, உலகம் முழுவதும் சுமார் 330 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், “அண்மைக்காலங்களில் பலரும் போலியான தகவல்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வருவதால், அவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில், முதலில் இந்த போலியான செய்தியை பகிர்ந்த நபரின் டேட்டாக்களை கொடுக்க வேண்டும்” என வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டது. ஆனால், அதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததால், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021இல் மாற்றம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின்போது, மெட்டா நிறுவன தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அப்போது, “வாட்ஸ்அப்பின் என்கிரிப்ஷன் தொழில்நுட்பம், மெசேஜ் அனுப்பும் பயனரும், பெறும் பயனரும் மட்டுமே செய்திகளைப் படிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனரின் தனியுரிமைக்கு முக்கியமானது.
வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் பயனாளர்களின் விவரங்களை வெளியிடக் கூறுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இந்த விதிமுறை முழுமையாக செயல்படுத்தப்பட்டால், தாங்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டியதிருக்கும். உலகில் வேறு எந்த நாடுகளிலும் இதுபோன்ற விதிமுறைகள் இல்லை. அரசு எப்போது வாட்ஸ்அப் தகவல்களை கேட்கும் என்பது தெரியாது என்பதால், பல நூறு கோடி வாட்ஸ்அப் தகவல்களை பல ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டியதிருக்கும்” என அந்த நிறுவனம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில், மாநிலங்களவையில், “வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா?” என காங்கிரஸ் எம்.பி விவேக் தங்கர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “வாட்ஸ்அப் அல்லது மெட்டா இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதற்கான எந்த திட்டத்தையும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தெரிவிக்கவில்லை. சமூக ஊடகத் தளங்கள் தொடர்பான மத்திய அரசின் உத்தரவுகள் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்காக வெளியிடப்படுகின்றன.
இந்த வழிகாட்டுதல்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைக் காப்பதற்கும் மற்ற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கும் முக்கியமானவை. குற்றச் செயல்களைத் தூண்டும் அல்லது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளின் நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பயனர்களின் தனியுரிமைக்கு மெட்டா நிறுவனம் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து வரும்நிலையில், வாட்ஸ்அப் இந்திய சந்தையில் இருந்து வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் பயனர்களிடம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.