பாஜக மூத்தத் தலைவர் அமித் ஷா முகநூல்
இந்தியா

தேர்தல் பரப்புரைக்காக 2 நாள் பயணம்.. தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா! பயண விவரம் இதோ!

தேர்தல் பரப்புரைக்காக 2 நாள் பயணமாக பாஜக மூத்தத் தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வருகிறார்.

PT WEB

தேர்தல் பரப்புரைக்காக 2 நாள் பயணமாக பாஜக மூத்தத் தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 12ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மதுரை வரும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை செல்கிறார்.

அங்கு பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து அமித் ஷா வாகனப் பேரணி செல்கிறார். அதனை தொடர்ந்து மீண்டும் மதுரை திரும்பும் அமித் ஷா, மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக வாகனப் பேரணி சென்று வாக்கு சேகரிக்க உள்ளார். அதன் பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தும் அமித்ஷா, இரவு மதுரையிலேயே ஓய்வெடுக்கிறார்.

ஏப்ரல் 13ஆம் தேதி காலை திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தக்கலை செல்கிறார். அங்கு பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாகனப் பேரணி நடத்துகிறார். அதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு, அங்கிருந்து நாகை சென்றடையும் அமித் ஷா, பாஜக சார்பில் பிற்பகலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் திருச்சியிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித் ஷா,பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து மாலை 6 மணிக்கு வாகன பரப்புரை மேற்கொள்கிறார். அத்துடன் 2 நாள் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு அமித் ஷா டெல்லி புறப்படுகிறார்.