இந்தியா

இ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்

இ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்

webteam

பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் இ-சிகரெட் பயன்பாடு  உள்ளதா என்பது  தொடர்பான ஆய்வை ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் அமைச்சரவை கூட்டத்தில் இ-சிகரெட்டிற்கு தடை விதிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இ-சிகரெட் பயன்பாடு, உற்பத்தி, வணிகம் ஆகிய அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடை ஒழுங்காக அமல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் வகையில் மத்திய சுகாதார துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதார துறையின் செயலாளர் பிரீத்தி சுதன் மாநில அரசுகள் மற்றும் மத்திய மனிதவள அமைச்சகம் ஆகியவற்றிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,“ மத்திய அரசு இ-சிகரெட் பயன்பாடு மற்றும் உற்பத்தி ஆகிய அனைத்திற்கும் அவசர சட்டம் மூலம் தடை விதித்துள்ளது. ஆகவே இந்தத் தடை சரியாக அமல்படுத்த அனைத்து துறைகளும் சரியான நடவடிக்கையை எடுக்கவேண்டும். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் இ-சிகரெட் பயன்பாடு மற்றும் உபயோகம் குறித்து மாதம் தோறும் ஆய்வு நடத்தவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.