இந்தியா

பெகாசஸ் விவகாரம்: முடக்கப்படும் நாடாளுமன்றம் - சமாதான முயற்சியில் மத்திய அரசு

பெகாசஸ் விவகாரம்: முடக்கப்படும் நாடாளுமன்றம் - சமாதான முயற்சியில் மத்திய அரசு

PT WEB

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

பெகாசஸ் உளவு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 10 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முறையாக நடைபெறவில்லை. இதையடுத்து மத்திய அரசு அவையை நடத்துவதற்கான சமாதான முயற்சிகளை தொடங்கியுள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்.

அப்போது முதலில் கோவிட் தொற்று குறித்தும், பின்னர் பெகாசஸ் குறித்தும் விவதாம் நடத்தலாம் என கூறியதாகத் தெரிகிறது. இதேபோல, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பல மூத்த தலைவர்கள் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்றால், நாளை முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போல செயல்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில், இதுவரை ஒரு மசோதா கூட முழுமையாக விவாதிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க வேண்டும் என்பது தான் எதிர்க் கட்சித் தலைவர்களின் கருத்தாக உள்ளது.