பெகாசஸ் விவகாரத்தில், இந்தியர்கள் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள மத்திய அரசு, இதுகுறித்த சர்ச்சைகைளை விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்படுமென தெரிவித்துள்ளது.
பெகாசஸ் செயலியின் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் என். ராம், எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு உள்ளிட்டோரின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த வாரம் இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் இரண்டு பக்க பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், பெகாசஸ் விவகாரத்தில் அரசுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. ஊகங்களின் அடிப்படையிலேயே வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், ஆதாரமற்ற உறுதிப்படுத்தப்படாத முழுமையான தகவல்கள் எதுவும் இல்லாத அறிக்கைகளின் அடிப்படையிலேயே மனுக்கள் இருப்பதாகவும் அதில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்தியர்கள் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் விளக்கமளித்துள்ள மத்திய அரசு, எனினும் இந்த விவகாரத்தில் எழுப்பப்பட்ட சர்ச்சைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படுமென குறிப்பிட்டுள்ளது.