இந்தியா

மத்திய அமைச்சரவை மாலையில் விரிவாக்கம்: ஹர்ஷ்வர்தன் உள்பட 12 அமைச்சர்கள் ராஜினாமா

மத்திய அமைச்சரவை மாலையில் விரிவாக்கம்: ஹர்ஷ்வர்தன் உள்பட 12 அமைச்சர்கள் ராஜினாமா

kaleelrahman

மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன்படி கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் அம்மாநிலத்தை சேர்ந்த அனுப்பிரியா படேல், வருண் காந்தி, நிஷாத் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனாவால், ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர் பசுபதி பாரஸ், மகாராஷ்டிராவின் நாராயண் ரானேவுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சர்களில் எஸ்சி வகுப்பினர் 12 பேரும் எஸ்டி வகுப்பினர் 8 பேரும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 27 பேரும் இடம்பெறவுள்ளதாக தெரிகிறது. சிறுபான்மையினர் 5 பேரும் மகளிர் 11 பேரும் இடம்பெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கணிப்புகளுக்கு மத்தியில், அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன், சதானந்த கவுடா, சந்தோஷ் கங்குவார் உள்ளிட்ட பல அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பிரதமர் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதற்கான அழைப்பிதழ் ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக எல்.முருகன் டெல்லியில் முகாமிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.