மத்திய பட்ஜெட்,  புதிய தலைமுறை
இந்தியா

10 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட் கண்ட மாற்றம் என்ன?

மத்திய பட்ஜெட், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்நேரத்தில், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட் கண்ட மாற்றம் என்ன என்பதை பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர்: சேஷகிரி

மத்திய பட்ஜெட், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்த சிறப்புத் தொகுப்புகளை நாள்தோறும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், அரசின் வரவு செலவுகள் கடந்த 10 ஆண்டுகளில் எப்படி மாற்றம் கண்டுள்ளன. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் விவரிக்கிறது இன்றைய சிறப்புத் தொகுப்பு.

2014ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் போது ப.சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்திருந்தார்.

2024ஆம் ஆண்டு மோடி அரசின் 2ஆவது ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் போது நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டார். இவ்விரண்டுக்கும் 10 ஆண்டு இடைவெளி உள்ள நிலையில் அரசின் வருவாய், செலவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரியவருகின்றன.

2014-ல் ப.சிதம்பரம் சமர்ப்பித்த பட்ஜெட்டில் கடன்கள் மற்றும் இதர இனங்கள் மூலம் 25 காசுகள் கிடைப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது 28 காசுகளாக உயர்ந்துள்ளது. 2014இல் கார்ப்பரேட் வரி மூலம் 21 காசுகள் கிடைத்த நிலையில், 2024இல் அது 17 காசாக குறைந்துள்ளது. சிதம்பரம் சமர்ப்பித்த பட்ஜெட்டில் வருமான வரி மூலம் 14 காசுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட்டில் அது 19 காசாக உயர்ந்துள்ளது.

சுங்க வரி மூலம் கிடைத்த தொகை 10 காசுகளில் இருந்து 4 காசுகளாக குறைந்துள்ளது. பொருட்களுக்கான உற்பத்தி வரி மூலம் 9 காசு முன்பு கிடைத்த நிலையில், தற்போது 5 காசாக குறைந்துள்ளது. சேவை வரிகள் மூலம் 10 காசு கிடைத்த நிலையில், தற்போது அது சரக்கு மற்றும் சேவை வரியாக மாறியுள்ள அதில் கிடைக்கும் வருவாய் 18 காசாக அதிகரித்துள்ளது. வரி அல்லாத வழிகளில் கிடைத்த வருவாய் 8 காசிலிருந்து 7 காசாக குறைந்துள்ளது. கடன் சாரா மூலதன வரவு முறையில் 3 காசு கிடைத்த நிலையில், தற்போது அது ஒரு காசாக குறைந்துள்ளது.

income tax

இதே போல, ஒரு ரூபாய் அடிப்படையில் அரசின் செலவினங்கள் கடந்த 10 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது என்பதை பார்க்கலாம். 2014இல் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த 10 காசுகள் செலவிடப்பட்ட நிலையில் தற்போது அது 16 காசாக அதிகரித்துள்ளது. 2014இல் கடனுக்கான வட்டியாக 20 காசுகள் செலவிடப்பட்டு வந்த நிலையில், தற்போதும் அதே அளவு தொகையே செலவிடப்படுகிறது.

மானியமாக முன்பு 12 காசுகள் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது சரிபாதியாக அதாவது 6 காசாக ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறைக்காக முன்பு 10 காசுகள் செலவிடப்பட்ட நிலையில், தற்போது அது 8 காசாக குறைக்கப்பட்டுள்ளது. வரிகளில் மாநில அரசுகளுக்கான பங்காக 18 காசுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 20 காசாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் கடனுக்கு வட்டியாக அரசு கட்டும் தொகை உயர்ந்துள்ளது, கார்ப்பரேட் வரி வருவாய் குறைந்து, தனி நபர் வருமான வரி, ஜிஎஸ்டி வரி வருவாய் உயர்ந்துள்ளது. மானிய செலவுகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது, மாநில அரசுகளுக்கு வரி பங்கு உயர்ந்துள்ளது இப்புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது தெரியவருகின்றன.