பொது சிவில் சட்டம் - உத்தராகண்ட் முகநூல்
இந்தியா

சட்டப்பேரவையில் UCC மசோதா தாக்கல்; பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாகிறது உத்தராகண்ட்!

உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி.

ஜெனிட்டா ரோஸ்லின்

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாய் திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், இன்று (பிப்.6) தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தைத் தாக்கல் செய்தது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா, வாக்கெடுப்பிற்குப் பின் நிறைவேற்றப்பட உள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அரசியல் சாசன புத்தகத்தினை கையில் ஏந்தியபடி உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு இன்று சென்ற அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தினை அறிமுகம் செய்தார்.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் பொது சிவில் சட்டத்தினை ஏற்கும் முதல் மாநிலமாக உத்தராகண்ட் மாறும். உத்தராகண்ட்டை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாதாக நேற்றைய தினம் பொதுசிவில் சட்ட மசோதாவிற்கு உத்தராகண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் அதுவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம்:

பாஜகவை பொருத்தவரை பொது சிவில் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக அதனை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக சேர்த்துள்ளனர்.

சரி பொது சிவில் சட்டம் என்பது என்ன?

இந்தியாவை பொறுத்தவரை கிரிமினல் சட்டம் என்பது பொதுவானது. அதன்படி கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் பொதுவானவையே. இருப்பினும் அக்கிரிமினல் சட்டத்திலுள்ள உரிமையியல் சார்ந்த சட்டங்களான சிவில் சட்டங்கள் அதாவது குழந்தை தத்தெடுப்பு, திருமணம், விவாகரத்து போன்றவை மட்டும் தனிநபர் மற்றும் மதநம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

இந்த பொது சிவில் சட்டம் என்பது சிவில் சட்டத்தினையும் அனைவருக்கும் பொதுவான சட்டமாக மாற்ற வேண்டும் எனக்குறிக்கிறது. அதாவது, பொது சிவில் சட்டம் என்பது, மதத்தின் அடிப்படையில் இல்லாமல் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியான பொதுவான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது ஆகும்.

கேரளா, மிசோரம் போன்ற மாநிலங்கள் இதற்கு எதிராக தீர்மானத்தினை இயற்றியுள்ளனர் என்பதும் கூறிப்பிடத்தக்கது.