உத்தரகாண்ட் ட்விட்டர்
இந்தியா

பொது சிவில் சட்ட மசோதா: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டது.

Prakash J

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாய் திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், நேற்று (பிப்.6) தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தது.

இந்த மசோதா மீது விவாதங்கள் நேற்றும் இன்றும் விவாதங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, இன்று (பிப்.7) உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அது சட்டமாக அமலுக்கு வரும். இதன்மூலம் நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னர் இதனை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை, உத்தரகாண்ட் பெறும்.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் நுழையக் கடுமையான விதிகள்!

இந்த பொது சிவில் சட்டத்தில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் நுழையக் கடுமையான விதிகள் வகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலில், பொது சிவில் சட்டம் அமலானதும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் அல்லது புதிதாக அத்தகைய உறவில் ஈடுபட இருப்பவர்கள் கட்டாயம் அரசிடம் (மாவட்ட நிர்வாகம்) தங்கள் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும் எனவும், இந்த உறவில் நுழைபவர் கட்டாயம் 21 வயதைக் கடந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை 21வயதிற்கு கீழ் இருந்தால் பெற்றோரின் ஒப்புதல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 மாதம் சிறைத் தண்டனை, ரூ.25,000 அபராதம்!

மேலும் அந்த மசோதாவில், உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவர்கள், மாநிலத்திற்கு வெளியே லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் எனவும், ஒழுக்கத்துக்கு எதிராகவோ அல்லது இருவரில் ஒருவர் முறையாக அரசுக்குத் தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்டாலோ அல்லது மற்றொரு உறவிலிருந்தாலோ அல்லது இருவரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தாலோ, அரசுக்குத் தவறான தகவல்களைக் கொடுத்தாலோ அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

model image

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பற்றிய பிரகடன தகவல்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் அல்லது தவறான தகவல்களை வழங்கினால் 3 மாதம் சிறைத் தண்டனை, ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். லிவ்-இன் உறவு குறித்து பதிவுசெய்யத் தவறினால், அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். பதிவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டால், 1-3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா: சரத் பவார் அணிக்கு புதிய கட்சிப் பெயர்.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!