டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் என தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, 10 ஆண்டுகளுக்கு குறையாமல் மத்திய அரசில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 10ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். திட்டத்தில் சேர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 விழுக்காடு ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
பணி ஓய்வுக்குப் பிறகு, அரசு ஊழியர் உயிரிழக்கும்பட்சத்தில், குடும்ப உறுப்பினருக்கு ஓய்வூதியத்தில் 60 விழுக்காடு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும். ஓய்வு பெறும் போது கூடுதல் பணிக்கொடையுடன் பணப்பலன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓய்வூதியத் திட்டம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதனிடையே, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தில் அக்கறை கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.