இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்துவருவதால், வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 8.35 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE)வெளியிட்ட புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை இழப்புகள் மற்றும் காரிப் பருவத்தின் விதைப்புப் பணிகள் முடிந்த நிலையில் வேலையின்மை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்ட நிலையில், வேலைவாய்ப்பின்மையின் சதவிகிதம் அதிகரித்துள்ளது வியப்பாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சதவிகிதம் ஜூலையில் 37. 6 சதவிகிதமாக இருந்தது. அதை ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதம் 37.5 சதவிகிதமாக குறைவாக உள்ளது. அது வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 8.4 ஆக உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு மார்ச் மாதத்தைவிட குறைவானது.
கொரோனா பாதிப்புக்கு முந்தைய பிப்ரவரி, ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 7.22 மற்றும் 7.76 சதவிகிதத்திற்கு இடையில் இருந்தது. அதாவது, வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் ஜூலையில் 6.66 சதவிகிதமாகவும் ஆகஸ்ட் மாதம் 7.6 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது.
"ஜூலை மாதத்தில் ஊதியப் பணிகள் குறைந்து வருவதை நாங்கள் கண்டோம், ஆனால் தினசரி ஊதியப் பணிகள் மற்றும் ஒற்றை உரிமையாளர் நிறுவனப் பணிகளும் சேர்க்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் பெருகுகிறதா அல்லது வீழ்ச்சியுறுகிறதா என்பதை செப்டம்பர் வரை காத்திருந்து பார்க்கவேண்டும்" என்கிறார் தேசிய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் நிர்வாக இயக்குநர் வியாஸ்.