இந்தியா

'கையாளப்படும் நியமனங்கள்' - பிரதமர் அலுலகத்தின் 'அதிகார' மையம்!

'கையாளப்படும் நியமனங்கள்' - பிரதமர் அலுலகத்தின் 'அதிகார' மையம்!

webteam

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட சில வாரங்களில் நரேந்திர மோடி அரசு சில முடிவுகளை எடுத்தது. அதாவது, அமைச்சரவைக்கு இணையான அதிகாரம் படைத்த பிரதமருக்கு நெருக்கமான மூன்று உயர் அதிகாரிகளை நியமனம் செய்வதுதான் அந்த முடிவு. அதன்படி, முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

பிரதமர் மோடியின் மிகவும் நம்பகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவரான பி.கே.சின்ஹாவுக்கு இடமளிக்க, பிரதமரின் அலுவலகத்தில் (பி.எம்.ஓ) - பிரதமரின் முதன்மை ஆலோசகர் என்ற புதிய பதவியை மத்திய அரசு உருவாக்கியது. மிக நீண்ட காலம் பணியாற்றிய அமைச்சரவை செயலாளராக ஏற்கெனவே மூன்று நீட்டிப்புகளைப் பெற்றிருந்தவர் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியே 2021-க்கு வருவோம். மேற்கண்ட நான்கு அதிகாரிகளில் இருவர் தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி பிரதமர் அலுவலக பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளனர். ஆகஸ்ட் 2019-இல் மிஸ்ரா விலகினார்; தற்போது இந்த மாத தொடக்கத்தில் சின்ஹா விலகியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அதிகாரமும், தேசிய பாதுகாப்பின் மீதான செல்வாக்கும் அப்படியே இருக்கிறது. ஆனால், பிரதமரின் முதன்மை செயலாளராக இருக்கும் பி.கே.மிஸ்ரா, பிரதமர் அலுலவகத்தில் முக்கிய சக்தி மையமாக உருவெடுத்துள்ளார்.

முதல் இரண்டு மாதங்களைத் தவிர்த்து, தனது அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலம் முழுவதிலும் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக இருந்த மிஸ்ரா, பிரதமர் அலுவலகத்துக்குள் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார்.

'தி பிரின்ட்' செய்தித் தளம் கடந்த ஆண்டு அறிவித்ததன்படி, குஜராத் கேடர் அதிகாரிகள் 2014 முதல் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளனர். ஆனால், இந்தப் போக்கு மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக் காலத்தில் மட்டுமே வலுப்பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த நிருபேந்திர மிஸ்ரா வெளியேறியதிலிருந்து, குஜராத் கேடர் அதிகாரியான பி.கே.மிஸ்ரா தனது அதிகாரத்தை பலப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

குஜராத் கேடர் அதிகாரிகள் எந்த அளவுக்கு இந்திய அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர் என்பதை கிழ்கண்ட உதராணம் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

குருபிரசாத் மோகபத்ரா, செயலாளர், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (டிபிஐஐடி); பாதுகாப்பு தயாரிப்பு செயலாளர் ராஜ்குமார்; சுற்றுச்சூழல் செயலாளர் ஆர்.பி.குப்தா; ரசாயனங்கள் மற்றும் உரங்கள் செயலாளர் எஸ்.அபர்ணா; பி.பி. ஸ்வைன், வணிகச் சிறப்புச் செயலாளர்; பள்ளி கல்வி செயலாளர் அனிதா கார்வால்; மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (டிஓபிடி) ஸ்தாபன அலுவலர் சீனிவாஸ் கட்டிகிதலா... இவர்கள் அனைவரும் செயலாளர் நிலைகளில் உள்ள குஜராத் கேடர் அதிகாரிகள். இந்திய அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் உள்ளனர்.

வெறும் செயலாளர்கள் நிலையில் மட்டும் அவர்கள் இருக்கவில்லை. மாறாக, வெளியுறவுத்துறை போன்ற முக்கிய அமைச்சரவைகளில் தனிச்செயலாளர்களாகவும் உள்ளனர். மேலும், உள்துறை அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறைகளில் இயக்குநர் நிலைகளிலும் உள்ளனர். பிரதமரின் தனிச்செயலாளர்கள் வரை அவர்களது அதிகாரம் பரவிக்கிடக்கிறது. இது பி.கே.மிஸ்ராவின் அதிகாரத்தால் நிகழ்ந்தது என்கிறார்கள். காரணம், பிகே மிஸ்ரா சொந்த மாநிலம் ஓடிசா. அவர் பணி பெற்றது குஜராத். ஆகவே குஜராத் மற்றும் ஒடிசாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அம்மாநில அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

செயலாளர்களில் குஜராத் கேடர் அதிகாரிகளில் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, ஜவுளித்துறை செயலாளர், கார்ப்பரேட் விவகார செயலாளர் மற்றும் முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர் அனைவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட ஒடிசா கேடர் அதிகாரிகள்.

சட்ட விவகாரங்கள், சுகாதாரம், பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, உணவு மற்றும் பொது விநியோகம் போன்ற அமைச்சகங்களில் உள்ள பல முக்கியமான கூடுதல் மற்றும் கூட்டுச் செயலாளர் பதவிகளும் ஒடிசா கேடர் அதிகாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சிஇ) தலைவரும் ஒடிசா கேடர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

"இன்று நாட்டின் மிக சக்திவாய்ந்த அதிகாரத்துவம் மிக்கவர் யார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பி.கே.மிஸ்ராவின் பொறுப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகிறது. நியமனங்கள், இடமாற்றங்கள், அதிகார மட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் இவையாவும் மிஸ்ராவின் இடத்துக்கான பலத்தை தெளிவுபடுத்தியுள்ள" என்று பெயர் கூற விரும்பாத மத்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"பிரதமர் அலுவலகத்தை பொறுத்தவரை இரண்டு அதிகார மையங்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. அவர்கள் நிருபேந்திர மிஸ்ரா மற்றும் பி.கே.மிஸ்ரா. இருவருக்கும் இடையிலான பொறுப்புகள் சாரியாக வரையறுக்கப்பட்டுள்ளன. நிருபேந்திர மிஸ்ரா அனைத்து கொள்கைகளையும் கவனித்துக்கொள்வார். பி.கே.மிஸ்ரா நியமனங்கள் கையாள்வார்" என்கிறார் அந்த மூத்த அதிகாரி.

மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே அவருடன் நெருக்கமாக இருந்த மற்றொரு உதவியாளர் ஏ.கே.ஷர்மா. ஷர்மா 2014 முதல் பிரதமர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் விலகினார். 'அவர் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எம்.எஸ்.எம்.இ செயலாளராக நியமிக்கப்பட்டார். இது நிதின் கட்கரியின் கீழ் இயங்கக்கூடிய அமைச்சகம். ஆனால், இது அவருக்கு ஒன்றும் பெரிய பொறுப்பெல்லாம் இல்லை. மேலும், அவர் நிருபேந்திர மிஸ்ராவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் வெளியேறியதை இந்தச் சூழலுடன் நாம் பொறுத்திப்பார்க்க முடியும்" என்ற உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பி.எம்.ஓ-வில் கூடுதல் செயலாளர் பதவியில் இருந்து ஷர்மா வெளியேற்றப்பட்டபோது, அவரது சக கூடுதல் செயலாளர் தருண் பஜாஜும் இருந்தார். மேலும், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக அவர் மாற்றப்பட்டார். இப்போது அவர் வருவாய் துறையை கூடுதலாக கவனித்து வருகிறார்.

"கடந்த ஒரு வருடத்தில் பிரதமர் அலுவலகத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தன. கடந்த சில மாதங்களாக பிரதமர் அலுவலகத்தின் முழு மையமும் மாற்றப்பட்டுள்ளன" என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார். அடல் பிஹாரி வாஜ்பாயின் பிரதமர் அலுவலக இணை செயலாளராக பணியாற்றிய சக்தி சின்ஹா, 'தி பிரின்ட்' செய்தித் தளத்திடம் கூறும்போது, "பிரதமரின் முதன்மை செயலாளர், நியமனங்கள் மீது பெரும் செல்வாக்கு செலுத்துவது வழக்கத்திற்கு மாறானது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

"இது லால் பகதூர் சாஸ்திரியின் காலத்தில் தொடங்கிய ஒரு வரலாற்றுப் போக்கின் ஒரு பகுதியாகும். அப்போது அமைச்சரவை செயலாளர் அலுவலகத்திலிருந்து பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்புக்கு அதிகாரங்கள் மாற்றப்பட்டது அரங்கேறியுள்ளது. நியமனங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் குறிப்பிட்ட அளவு நடுநிலையாக செயல்படுவது சரியாக இருக்கும். காரணம் இது நம்பிக்கையின் செயல்பாடு. இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பிரதமர் அலுவலக பொறுப்புகளுக்கு தேர்வு செய்ய பல கட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். இதனால் நியமனங்கள் நடைபெற நீண்ட நாட்கள் எடுக்கும்" என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறினார்.

- செய்திக் கட்டுரை உறுதுணை: The Print