இந்தியா

‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும் இந்தியா’ - ஐநா அச்சம்

‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும் இந்தியா’ - ஐநா அச்சம்

webteam


2027ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில், மக்கள் தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் தொகை பெருக்கம் எதிர்க்கால சந்ததிகளுக்கு பல வகைகளில் பிரச்னைகளாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். 

மேலும் குழந்தைகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, குழந்தைக்கு நம்மால் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியுமா என்று சிந்திக்க வேண்டும் எனக்கூறிய அவர், சமூக விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் 138 கோடி மக்கள் தொகையுடன் முதலிடத்திலுள்ள சீனாவை, 2027 ஆம் ஆண்டு இந்தியா பின்னுக்கு தள்ளும் என ஐநா கூறியுள்ளது. அதேபோல் 2065 ஆண்டுக்குப் பின், இந்தியாவின் மக்கள் தொகை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அச்சம் தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.8 என்ற அளவில் இருப்பதாகவும், மற்ற மாநிலங்களில் இந்த விகிதம் 2.3ஆக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், 2027ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருமாறும் என எச்சரித்துள்ள ஐநா, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இந்தியா 133 கோடி மக்கள் தொகையுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவை தொடர்ந்து 3 ஆவது இடத்தில் அமெரிக்காவும், இந்தோனேசியா, பிரேசில் முறையே 4 ஆவது மற்றும் 5 ஆவது இடத்திலும் உள்ளன.