டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த கைது நடவடிக்கையை கவனித்து வருவதாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்திருந்தன. இதில்,
“நீதித்துறையின் சுதந்திரமும், அடிப்படை ஜனநாயகமும் கெஜ்ரிவால் வழக்கில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்” என ஜெர்மனி வெளியுறவுத்துறை தெரிவித்தது.
“இவ்விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
“கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் நியாயமான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்”அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர்
இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் மத்திய அரசு, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி டெல்லியில் உள்ள அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் தூதர்களுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது.
இந்நிலையில் ‘டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் போன்ற காரணங்களால் இந்தியாவில் அரசியல் அமைதியின்மை நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றதே...’ என்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஐ.நா பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ். அதை அவரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் துஜாரிக் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி “இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். தேர்தல் நடைபெறும் ஒரு நாட்டில் மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார் ஆண்டனியோ.
முன்னதாக நேற்றைய தினம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மேலும் 4 நாட்கள் விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் பதவியை இழக்கும் சூழ்நிலை இன்று எழுந்துள்ளது. ஒருவேளை அபப்டி நடந்தால் அவரது மனைவி சுனிதா புதிய முதல்வர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் போலவே அவரது மனைவி சுனிதாவும் இந்திய வருவாய் ஆட்சிப்பணி பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர்.
1993இல் போபாலில் நடந்த பயிற்சியின் போது இருவரும் சந்தித்தனர். இதன்பின் காதல் மலர்ந்து 1995இல் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆரம்ப காலங்களில் போராட்டங்கள், கட்சிப்பணிகளில் சுனிதா ஈடுபட்டார். எனினும் தற்போது ஆம்ஆத்மி கட்சியில் எந்தப்பொறுப்பிலும் சுனிதா இல்லை.
பீகார் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் பதவி விலக நேரிட்டபோது அவரது மனைவி ராப்ரி தேவி அப்பதவியில் தொடர்ந்தார். இதே பாணியை அரவிந்த் கெஜ்ரிவாலும் பின்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான வாய்ப்பு நிறைய உள்ளதாக கூறப்படுகிறது.