சபரிமலை பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அதன்மூலம்
சபரிமலையின் ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி
வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில்
பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில்
ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு
பெண்ணும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். ரெஹானா பாத்திமா இருமுடிகட்டி கொண்டு
சென்றார். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று அவர்கள் மீண்டும் திருப்பி
அனுப்பப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை
மூடப்பட்டது. இந்நிலையில் மண்டல பூஜைக்காக நவம்பர் 5-ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது.
இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல்
நவம்பர் 6-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும்
அவசரச்சட்டம் இயற்றி சபரிமலையின் ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கேரள முன்னாள்
முதலமைச்சர் உம்மன்சாண்டி வலியுறுத்தியுள்ளார். சபரிமலை பிரச்னையில் ஆளுங்கட்சியும், பாஜகவும்
எடுக்கும் நிலைப்பாடு சிந்திக்கவே முடியாதது எனவும் சபரிமலை பெயரில் ஆதாயம் தேடுவது சரியல்ல
எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு எதிர்வினைகள் உருவாகும் எனவும்
உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.