இந்தியா

ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி புகார்

ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி புகார்

rajakannan

ஆதார் தொடர்பானத் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேசிய தனிநபர் அடையாள ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஆதார் எண் முறை வழங்கப்படுவதற்கு முன்பே அது தொடர்பான சர்ச்சைகளும், விவாதங்களும், எதிர்ப்புகளும் தொடங்கிவிட்டன. ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆதார் எண் பாதுகாப்பானது என்று தொடர்ந்து மத்திய அரசு கூறி வருகிறது. 

இந்நிலையில், ஆதார் தொடர்பான தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரிலிருந்து வெளிவரும் ’தி ட்ரிபியூன் இந்தியா’ பத்திரிகை மேற்கொண்ட ஆய்வில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் குரூப் ஒன்றில் வெளியான தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

வாட்ஸ் அப் நபரிடம் ரூ.500 கொடுத்து இணையதளம் ஒன்றின் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு பெறப்பட்டது. அந்த இணைப்பில் சென்று பார்த்த போது, கோடிக்கணக்கானோரின் ஆதார் எண்கள், வீட்டு முகவரி, அஞ்சலக பின் கோடு, தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி உள்ளிட்ட பாதுகாக்கப்படவேண்டிய தகவல்கள் அதில் இருந்துள்ளன. மேலும் ரூ.300 கொடுத்து சாஃப்ட்வேர் ஒன்றினையும் பெற்றுள்ளனர். அந்த சாஃப்ட்வேர் மூலம் எந்தவொரு நபரின் ஆதார் எண்ணை மட்டும் அளித்தால், அதைக் கச்சிதமாக பிரின்ட் செய்துகொள்ள முடியும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை ட்ரிபியூன் செய்தி நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஆதார் தொடர்பான தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேசிய தனிநபர் அடையாள ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் தகவல்களை ஒருபோது திருட வாய்ப்பே இல்லை என்றும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளது. தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.