இந்தியா

“ஆதார் வாங்குவதை எப்படி நிறுத்துவீர்கள்” - சிம்கார்டு நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் கேள்வி

“ஆதார் வாங்குவதை எப்படி நிறுத்துவீர்கள்” - சிம்கார்டு நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் கேள்வி

rajakannan

உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், ஆதார் எண் வாங்குவதை எப்படி நிறுத்துவீர்கள் என செல்போன் நிறுவனங்களுக்கு ஆதார் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசின் திட்டங்களை பெற ஆதார் அவசியம் என்றும் அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி அதிரடியான தீர்ப்பை வழங்கியது. அத்தோடு, எந்தெந்த விவகாரங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் அவசியம் இல்லை என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டது. வங்கிக் கணக்குகள் துவங்க,  மொபைல் எண்கள் பெறுவதற்கு, சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும்,  பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியது. 

மொபைல் எண்கள் வாங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லையென உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், ஆதார் எண் வாங்குவதை நிறுத்துவதற்கான திட்டம் குறித்து பதில் அளிக்குமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆதார் ஆணையம் (UIDAI)  கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கு சிம்கார்டு வாங்க வேண்மென்றால் ஒரு படிமத்தில் நம்முடைய தகவல்களை நிரப்ப சொல்வார்கள். அடையாள அட்டை, முகவரிக்கான அட்டை ஆகியவற்றையும் ஒரு போட்டோவையும் கேட்பார்கள். எல்லாம் கொடுத்து சிம்கார்டு வாங்கினால் ஆக்டிவேட் ஆக 24 மணி நேரத்திற்கு மேலாகும். இதற்கிடையில் போன் செய்து, பெயர் மற்றும் முகவரி சரிதானா எனக் கேட்பார்கள். இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. 

ஆனால், தற்போது ஆதார் எண்ணும், கைரேகையும் இருந்தால் போதும் சிம்கார்டு வாங்கிவிடலாம் என்ற நிலை உள்ளது. உடனடியாக சிம்கார்டு ஆக்டிவேட் ஆகிவிடும்.  சிம்கார்டுக்கு ஆதார் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், வேறு என்ன மாற்று வழிமுறைகளை கடைபிடிக்க போகிறீர்கள் என சிம்கார்டு நிறுவனங்களை தனி நபர் அடையாள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஏர்டெல், ரிலையன்ஸ், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.