“கல்வி நிறுவனங்களில் பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட எந்த ஒரு பதவிக்கும் பொருத்தமான நபர்கள் இல்லாவிட்டால் அந்த பதவியை ஒதுக்கீடு செய்யப்படாததாக கருதலாம்” என சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக மானிய குழு (UGC) வெளியிட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறையால் சர்ச்சை வெடித்தது.
இது உயர்கல்வி அமைப்புகளில் இட ஒதுக்கீட்டை முழுமையாக அழிப்பதற்கான சதித்திட்டம் என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவரை நீக்கவேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது.
இந்த வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக ஜேஎன்யு மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். இதையடுத்து ஒரு பதவி கூட இடஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு மத்திய கல்வி அமைப்புகளில் ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு குறித்து எந்த குழப்பமும் இல்லை என கூறினார்.
இதனிடையே, வரைவு வழிகாட்டு நெறிமுறை குறித்து கருத்து கூறுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதாகவும் எனவே இணையதளத்திலிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் நீக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.
இதுவரை எந்த ஒரு பதவியும் ஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ள அவர், எதிர்காலத்திலும் எந்த பதவியும் இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்படாது என்றார்.