இந்தியா

படிப்பை முடித்தும் தாமதமாக பட்டம் வழங்குவதாகப் புகார் - யு.ஜி.சி. அதிரடி உத்தரவு

படிப்பை முடித்தும் தாமதமாக பட்டம் வழங்குவதாகப் புகார் - யு.ஜி.சி. அதிரடி உத்தரவு

சங்கீதா

பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணாக்கர்களுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்குவது காலதாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், “பட்டப்படிப்பை முடித்த மாணாக்கர்களுக்கு அவர்களுக்கு உரிய பட்டம், 180 நாள்களுக்குள் வழங்க வேண்டும். பட்டங்களை தாமதமாக வழங்குவது மாணவர்களின் வேலை வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, 180 நாள்களுக்குள் பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.