ரேவந்த் ரெட்டி! முகநூல்
இந்தியா

“சனாதனம் குறித்த கருத்துக்கு உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்” - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

ஜெனிட்டா ரோஸ்லின்

கடந்த ஆண்டு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

உதயநிதி ஸ்டாலின்

இப்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், “இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஒரே வழக்காக மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக்கூறி உதயநிதி ஸ்டாலின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போதுவரை, இவ்வழக்குகள் குறித்த விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று கொண்டுள்ளது.

ஆ.ராசா

இதற்கிடையே திமுக துணை பொதுச் செயலாளரான ஆ.ராசாவும் ‘’சனாதனம் என்பது எச்.ஐ.வி போன்றது. பிறப்பால், சாதியால் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல; தாழ்ந்தவர்களும் அல்ல. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் நாட்டு மக்களை பிளவுபடுத்துவோரை எதிர்க்கும் ஒரே சக்தியாக தி.மு.க இருக்கிறது. உதயநிதி கூறிய கருத்தைக்கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியில், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரேவந்த் ரெட்டி அந்த நேர்காணலில் தெரிவிக்கையில், “தெலங்கானா மாநிலத் தலைவர் மற்றும் முதல்வர் என்ற முறையில் அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்து தவறு என்று நான் கூறுகிறேன். அதற்கு நிச்சயம் அவர் பொறுப்பேற்க வேண்டும். அது அவருடைய சிந்தனையாக இருக்கலாம். ஆனால் சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய நாடு. ஆகவே, மத உணர்வுகளை மதித்து, அதற்கு தீங்குவிளைவிக்காமல் அனைவரின் நம்பிக்கைகளையும் நிலைநிறுத்துவதே முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்தக் கருத்து, I.N.D.I.A கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பதை காட்டுவதாக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.