இந்தியா

தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதலமைச்சரான உத்தவ் தாக்கரே...

தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதலமைச்சரான உத்தவ் தாக்கரே...

webteam

தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முறையாக முதலமைச்சரானவர் என்ற பெருமையை உத்தவ் தாக்கரே பெற்றுள்ளார். 

மகாராஷ்டிரா அரசியல் என்றாலே நினைவுக்கு வருவது பால் தாக்கரேவும், அவரது சிவசேனா கட்சியும்தான். மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கே என்ற முழக்கத்துடன் 1966-ஆம் ஆண்டு சிவசேனாவை தொடங்கினார் பால் தாக்கரே. மராட்டிய அரசியலில் தன்னிகரற்ற சக்தியாக வலம் வந்த பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாக கருதப்பட்டவர், அவரது இளைய சகோதரர் மகன் ராஜ் தாக்கரே. 

எனினும், திடீர் திருப்பமாக பால் தாக்கரேவின் இளைய மகனும் அரசியல் வாடையே அறியாதவருமான உத்தவ் தாக்கரே, 2003-ஆம் ஆண்டு சிவசேனாவின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதற்கு முந்தைய ஆண்டு நடைபெற்ற மும்பை மாநகராட்சி தேர்தலில், சிவசேனாவுக்கு வெற்றி தேடி தந்ததற்காக, உத்தவ் தாக்கரேவுக்கு இப்பரிசை வழங்கினார் பால் தாக்கரே.

2006-ல் கருத்து முரண்பாடுகளால் ராஜ் தாக்கரே கட்சியிலிருந்து வெளியேறினார். அப்போது சிவசேனாவை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த உத்தவ், 2012-ஆம் ஆண்டு, பால் தாக்கரே மறைந்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டே கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நீண்ட நாள் கூட்டணியிலிருந்த பாஜக-சிவசேனா உடனான கூட்டணி முறித்தது. இதனையடுத்து சிவசேனா கட்சி தனித்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட உத்தவ் தாக்கரே அதுவரை சிவசேனா பெற்றிராத வெற்றியை பெறச் செய்தார். அந்தத் தேர்தலில் சிவசேனா கட்சி 63 இடங்களில் வெற்றிப் பெற்றது. 

இந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜகவுடன் இணைந்து சிவசேனா போட்டியிட்டது. எனினும் தேர்தலுக்கு பின்பு முதலமைச்சர் பகிர்வில் ஏற்பட்ட பிரச்னையால், பாஜகவின் கூட்டணியை முறித்துக்கொண்டது சிவசேனா. தற்போது காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. இதன்மூலம் அரசு பதவியே வகிக்காத அரசியல் குடும்பத்திலிருந்து முதல் முறையாக முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார். உத்தவ் தாக்கரே இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது மகன் ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.