இந்தியா

ஊபர் ஈட்ஸை விலைக்கு வாங்குகிறது சொமேட்டோ..!

ஊபர் ஈட்ஸை விலைக்கு வாங்குகிறது சொமேட்டோ..!

webteam

ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தை சொமேட்டோ விலைக்கு வாங்கவுள்ளது.

உணவு டெலிவரி என்பது சமீபத்தில் அசுர வளர்ச்சி அடைந்த ஒன்று. அதிரடி ஆஃபர்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்த, உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அவர்களை தக்கவைத்துக்கொண்டன. எந்த நேரத்திற்கும் வீடு தேடி உணவு வரும் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் உணவு டெலிவரி நிறுவனங்கள் பிரபலமடைந்தன.

குறிப்பாக ஊபர் ஈட்ஸ், சொமேட்டோ நிறுவனங்கள் பலராலும் பயன்படுத்தப்பட்டன. இந்த தொழில் போட்டியில் சொமேட்டோவை விட ஊபர் ஈட்ஸ் பின்தங்கத் தொடங்கியது. நஷ்டம் காரணமாகவும், வாடகை கார் தொழிலில் கவனம் செலுத்துவதற்காகவும் தங்களது ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தை சொமேட்டோவிடம் விற்கிறது அந்நிறுவனம்.

இதனால் பல ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஆனாலும் அவர்களை தக்கவைத்துக்கொள்ள ஊபர் நிறுவனம் முயற்சி செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் மட்டுமே ஊபர் ஈட்ஸ் சொமேட்டோவிற்கு விற்கப்படுவதாகவும், இலங்கை மற்றும் பங்களாதேஷில் வழக்கம்போல் ஊபர் ஈட்ஸ் செயல்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள சொமேட்டோ சிஇஓ, இந்தியாவில் உணவு வர்த்தகம் வளர நாங்கள் உதவியிருக்கிறோம். 500 நகரங்களில் உணவு வணிகத்தை பெருக்கியிருக்கிறோம். இது பெருமையான ஒன்று. ஊபர் ஈட்ஸை வாங்குவதால் எங்கள் வணிகம் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தை விற்பது குறித்து பேசியுள்ள ஊபர் ஈட்ஸ் சிஇஓ, இந்தியா எங்களின் முக்கிய சந்தை. நாங்கள் வாடகை கார் தொழிலில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். வேகமாக வளர்ந்துவரும் சொமேட்டோவுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.