செயலிகள் மூலம் ஆட்டோ, டாக்சி புக் செய்து செல்லும் பழக்கம் பலரிடமும் அதிகரித்திருக்கிறது. கட்டணமும் முறையாக இருப்பதால் மக்கள் இதுபோன்ற சேவையையே அதிகம் விரும்புகிறார்கள். இருப்பினும் சமயங்களில் டிரைவர் மற்றும் வாடிக்கையாளர் இடையே ஏற்படும் தகராறுகள், குளறுபடிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறது. ஒருகட்டத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடும் அளவுக்கும் இட்டுச் சென்றுவிடுகிறது. அந்த வகையில் 2018ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு மும்பை நுகர்வோர் நீதிமன்றம் தற்போதுதான் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அதன்படி, மும்பையின் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கவிதா ஷர்மா. இவர் கடந்த 2018ம் ஆண்டு மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் வழியாக வருவதற்கு டிக்கெட் பதிவு செய்திருந்தார். சரியாக மாலை 5.50 மணிக்கு விமானம் புறப்படும் நேரமாக இருந்தது.
டோம்பிவிலியில் இருந்து சத்ரபதி விமான நிலையத்துக்கு செல்ல 36 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால் சரியாக பிற்பகல் 3.29 மணிக்கே Uber app மூலம் கவிதா ஷர்மா கேப் புக் செய்திருக்கிறார். ஆனால் பல முறை தொடர்பு கொண்டும் எடுக்காமல் இருந்த அந்த டிரைவரோ 14 நிமிடங்கள் கழித்தே பிக்கப் லொகேஷனுக்கு வந்திருக்கிறார்.
அதன் பிறகு சரியான வழியில் செல்லாமல் மாற்றுப்பாதையில் சென்று தாமதப்படுத்தியிருக்கிறார் அந்த ஊபர் டிரைவர். இதுபோக காருக்கு கேஸ் (CNG) நிரப்புவதாகச் சென்றது கூடுதலாக நேரம் கழிந்துவிட்டது. இப்படியாக பல தாமதங்களுக்கு பிறகு மாலை 5.50 ஃப்ளைட்க்கு 5.23 மணிக்குதான் விமான நிலையத்திற்கே சென்றடையச் செய்திருக்கிறார். இதுபோக புக் செய்யும் போது 563 ரூபாய் என காண்பித்த கேப் சர்வீஸ் கட்டணம் இறங்கும் போது 703 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
ஊபர் டிரைவரின் செயலால் விமானத்தில் செல்ல முடியாமல் போனதோடு அதிக கட்டணமும் கொடுத்து டென்ஷன் ஆனது மட்டும்தான் அந்த வழக்கறிஞர் கவிதாவுக்கு எஞ்சியிருக்கிறது. இதனால் பெருத்த கோபத்துக்கு ஆளான அவர் முதலில் தானே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி ஊபர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் விடுக்கச் செய்திருக்கிறார்.
ஆனால் ஊபர் தரப்போ, நடந்த சம்பவத்துக்கு டிரைவர்தான் பொறுப்பு என தட்டிக்கழித்து பேசி வாதாடியிருக்கிறது. இதனையடுத்து மும்பை நுகர்வோர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் செயலியை நிர்வகிப்பதில் ஊபர் நிறுவனத்துக்கே அளப்பறிய பங்கு இருப்பதால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் கவிதாவுக்கு வழக்கு விசாரணைக்கு ஆன செலவு உட்பட 20,000 ரூபாய் அபராதம் வழங்கும் படி ஊபருக்கு உத்தரவிட்டிருக்கிறது.