அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது சமூகவலை தளங்களில் பயன்படுத்தப்படும் IDயையும் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
பணி நிமித்தமாகவும் கல்வி நிமித்தமாகவும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் அமெரிக்கா செல்கின்றனர். இந்த சூழலில் இனி அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், கடந்த 5 ஆண்டுகளில் அவர் பயன்படுத்தி வரும் சமூகவலைதளங்களின் IDயையும் சமர்ப்பிக்க வேண்டும். ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அந்த நபரின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்வதற்கு இந்த நடைமுறை கொண்டு வரப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
விசாவுக்கான நேர்முகத்தேர்வின் போது சமூகவலைதள செயல்பாடுகள் குறித்தும் கேட்கப்படுமென தெரிகிறது. தேசப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சமூகவலைதள கணக்குகளை ஆய்வு செய்வது விசா வழங்கும் நடைமுறையை மேலும் தாமதமாக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.