உத்தரப் பிரதேசத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் துப்பாக்கிமுனையில் பொதுமக்களிடம் சோதனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப் பிரதேசத்தின் பதாயூன் என்ற பகுதியில் உள்ள வாசீர்கஞ்ச் சாலையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற பொதுமக்களை மறித்த காவலர்கள், துப்பாக்கிமுனையில் அவர்களை சோதனை நடத்தினர். இந்தக் காட்சிகள் இடம்பெற்ற வீடியோவையும் காவலர்களே எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சாலையில் வரும் இரு சக்கர வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். உடனடியாக தங்களது கைத்துப்பாக்கியை வாகன ஓட்டிகள் முன்பு நீட்டி, அவர்களின் இரு கைகளையும் தூக்கச் சொல்கின்றனர். பிறகு அவர்களை போலீசார் சோதனை நடத்துகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே அவ்வாறு சோதனை நடத்தப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த எஸ்.பி. அசோக் குமார் திரிபாதி, வாகன சோதனையின் போது குற்றவாளிகள் திடீரென துப்பாக்கியால் போலீசாரை சுட்டுவிடுகின்றனர். இது போன்ற அனுபவங்களை சந்தித்துள்ளோம். அது போல ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கையாகவே துப்பாக்கி முனையில் சோதனை செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி முனையில் சோதனை செய்வது கண்டனத்துக்குரியது என சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.