இந்தியா

எலுமிச்சை பழத்தை பறக்கவிட்ட மந்திரவாதிகள் - திடுக்கிட்ட போலீஸ்

Rasus

திருப்பதி அருகே கோயில் ஒன்றில் பூஜை நடத்தி புதையல் எடுக்கப்போவதாகக் கூறிய மந்திரவாதிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான இருவரும் எலுமிச்சம்பழத்தை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினருக்கு விளக்கம் காட்டிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடபுரம் கிராமத்தில் குன்று ஒன்றின் மீது மிக பழமையான வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் மற்றும் கோயிலையொட்டி உள்ள பகுதிகளில் புதையல் இருப்பதாகக் கூறி இரண்டு மந்திரவாதிகள் தலைமையில் பூஜை நடத்தப்பட்டிருக்கிறது. புதையலை எடுப்பதாகக் கூறி அவர்கள் பூஜை செய்துள்ளனர்.

சத்தம் கேட்டு அங்கு சென்ற கிராம மக்கள் மந்திரவாதிகள் இருவரை பிடித்து எர்ரவாரிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அவர்கள் திருப்பதியை சேர்ந்த பட்டாபிராம் ரெட்டி, ஒம் பிரகாஷ் ராஜ் எனத் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.‌ அப்போது கைது செய்யப்பட்ட மந்திரவாதிகள் இருவரும் காவல்துறையினர் முன்னிலையிலேயே, ஸ்ரீசக்கரம் அமைத்து அதனுள் எலுமிச்சை பழங்களை வைத்து மந்திரங்களை கூறி மையத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழத்தை காற்றில் பறக்க வைத்துள்ளனர்.

இதேபோல் வயல் வெளியிலும், வெட்ட வெளியிலும் காவல்துறையினர் முன்னிலையில் மந்திரங்கள் கூறி எலுமிச்சம்பழத்தை காற்றில் பறக்க வைத்து செய்முறை விளக்கம் காண்பித்துள்ளனர்.

தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களோடு தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருகின்றனர். அடிக்கடி இந்தக் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் மர்மமான முறையில் பூஜைகள் நடத்தப்படுவதாகவும் இங்கு வருவதற்கே அச்சமாக உள்ளதென்றும் கூறும் பொதுமக்கள் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.