இந்தியா

பயணிகளின் உடல் வெப்பத்தை கண்டறிய ரயில் நிலையங்களில் இரண்டு அடுக்கு தெர்மல் கேமரா..!

webteam

பயணிகளின் உடல் வெப்பத்தை துல்லியமாக கண்டறிய ரயில் நிலையங்களில் இரண்டு அடுக்கு தெர்மல் கேமராவை பொருத்தும் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

ரயில்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா எனக் கண்டறிய உடல்வெப்ப பரிசோதனைக்காக நிரந்தரமான தொழில்நுட்ப கட்டமைப்பை மேற்கொள்ள ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதன்படி, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கடைபிடித்து வரும் இரண்டு அடுக்கு தெர்மல் கேமராக்கள் சோதனை தொழில்நுட்ப வசதியை இந்தியாவில் கொண்டு வருவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் நிறுவப்படும் இந்த தெர்மல் கேமராக்கள் மூலம், ஒரு மீட்டர் தொலைவில் இருந்தே பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கலாம். இந்த தானியங்கி கேமராக்கள் ஒரு நொடியில் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.