இந்தியா

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜா. ஜாக்சன் சிங்

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, காஷ்மீரில் காவல்துறையினர், பண்டிட்டுகள், முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் ஆகியோர் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறையினரும், ராணுவத்தினரும் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு இன்று இரவு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கள் பாதுகாப்புப் படையினர் நெருங்குவதை அறிந்த தீவிரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில், அவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தப்பியோடிய மற்ற தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, குல்காம் மாவட்டத்திலும் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.