இந்தியா

1972ல் 2 ரூபாய்.. 2023ல் 20 ரூபாய்.. மக்களுக்காக கட்டணத்தை உயர்த்தாத ”பத்மஸ்ரீ” டாக்டர்!

1972ல் 2 ரூபாய்.. 2023ல் 20 ரூபாய்.. மக்களுக்காக கட்டணத்தை உயர்த்தாத ”பத்மஸ்ரீ” டாக்டர்!

webteam

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் எம்.சி.தவாருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கெளரவித்து வருகிறது. அந்த வகையில், நேற்றும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 77 வயதான மருத்துவர் டாக்டர் எம்.சி.தவாருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

1946ஆம் ஆண்டு, ஜனவரி 16ஆம் தேதி, பாகிஸ்தானின் பஞ்சாபில் பிறந்த தவார், பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் குடியேறினார். 1967ஆம் ஆண்டு, ஜபல்பூரில் எம்.பி.பி.எஸ்ஸை முடித்த அவர், 1971இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது இந்திய ராணுவத்தில் ஒரு வருடத்துக்கும் மேலாகப் பணியாற்றினார்.

அதன்பிறகு 1972 ஆம் ஆண்டு முதல் ஜபல்பூரில் மருத்துவ கிளினிக்கைத் தொடங்கி மிகக் குறைந்த கட்டணத்தில் சேவையாற்றி வருகிறார். ஆரம்பத்தில் வெறும் 2 ரூபாயில் சிகிச்சை அளிக்கத் தொடங்கிய அவர், இன்றும் மருத்துவச் சிகிச்சைக்காக ரூபாய் 20 மட்டுமே கட்டணமாகப் பெற்று வருகிறார். குறைந்த கட்டணத்தில் அவர் வழங்கி வரும் மருத்துவச் சேவையால் எண்ணற்ற மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறித்து மருத்துவர் எம்.சி.தவார், ”கால தாமதமானாலும் கடின உழைப்பு ஒருநாள் பலன் தரும். அந்தப் பலன், இன்று மக்களின் வாழ்த்துகளால் கிடைத்திருக்கிறது. மருத்துவச் சேவைக்காக மக்களிடம் குறைவாக கட்டணம் பெறுவது குறித்து வீட்டில் பெரிய விவாதமே நடக்கும். ஆனால், நான் கட்டணத்தை உயர்த்தியது கிடையாது. மக்களுக்குச் சேவை செய்வதே என்னுடைய ஒரே நோக்கம். உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்றார்.

இதுகுறித்து மருத்துவர் தவாரின் மகன் ரிஷி, "அரசியல் நோக்கத்துக்காகத்தான் விருதுகள் வழங்கப்படுகிறது என நாங்கள் நினைத்தோம். ஆனால் தரையில் உழைக்கும் மக்களையும் அரசாங்கம் கண்டுபிடித்து கவுரவிக்கும் விதம் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் தந்தை இந்த விருதைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார். மருத்துவர் தவாரின் மருமகள், “இந்த விருது எங்கள் குடும்பத்துக்கும் எங்கள் நகருக்கும் பெருமை சேர்க்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.