ரவீந்திர வாய்கர் எக்ஸ் தளம்
இந்தியா

1 ஓட்டில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட மும்பை வேட்பாளர்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

மகாராஷ்டிராவில் வேட்பாளர் ஒருவர் 1 ஓட்டில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், சில மணி நேரங்களில் அதிலும் மாற்றம் ஏற்பட்டது தற்போதைய செய்தியாக உள்ளது.

Prakash J

18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பெருத்த எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கி இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மகாராஷ்டிராவில் வேட்பாளர் ஒருவர் 1 ஓட்டில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், சில மணி நேரங்களில் அதிலும் மாற்றம் ஏற்பட்டது தற்போதைய செய்தியாக உள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவிலிருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இந்த நிலையில், மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஒரு சிவசேனாவும், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய சிவசேனாவும் பிரிந்து தனித்தனியாக இயங்கி வருகின்றன. இந்த இரு கட்சிகளும் தனித்தனியாக நடைபெற்று முடிந்து நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

இதையும் படிக்க: பச்சைக்கொடி காட்டிய சந்திரபாபு நாயுடு.. மீண்டும் பதவியேற்கும் மோடி!

இதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த ரவீந்திர வாய்கர் என்பவர் மும்பை வடமேற்குத் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் அமோல் கிருத்திகர் நிறுத்தப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்ட நிலையில், நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1 ஓட்டு வித்தியாசத்தில் ரவீந்திர வாய்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், பின்னர் தபால் வாக்குகளையும் சேர்த்து 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதாவது, வாக்குப் பதிவு தொடங்கும் முன்பே தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன.

ரவீந்திர வாய்கர்

3,000 தபால் வாக்குகளில் சுமார் 111 வாக்குகள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டன. பிறகு வாக்கு வித்தியாசம் 1 வாக்கு என்று வந்ததால், தேர்தல் அதிகாரிகள் மீண்டும் தபால் வாக்குகளை எண்ணினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அது மட்டுமல்ல, தபால் வாக்குகள் எண்ணப்படும்வரை வாய்கர் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணைய இணையதளத்திலும் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு இரவு 9 மணிக்குத்தான் 48 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர் | சிறையில் இருந்தபடியே Ex முதல்வரை வீழ்த்திய சுயேட்சை வேட்பாளர்... யார் இந்த ரஷீத்?