இந்தியா

''நான் பார்த்தேன்; மாமா வந்தார், அம்மாவை அடித்தார்'' -  5 வயது சிறுவனின் சாட்சியால் பிடிபட்ட கொலைகாரன்!

''நான் பார்த்தேன்; மாமா வந்தார், அம்மாவை அடித்தார்'' -  5 வயது சிறுவனின் சாட்சியால் பிடிபட்ட கொலைகாரன்!

webteam

பெண் உயிரிழந்து இரண்டு மாதங்கள் கழித்து அவர் கொலை செய்யப்பட்ட விவரத்தை 5 வயது சிறுவனின் சாட்சியை வைத்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சின்னயனாபால்ய கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் சுமலதா என்ற மனைவி, 5 வயது மகனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சுமலதா கடந்த செப்டம்பர் 18ம் தேதி வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடல்நிலை சரியில்லை என்று கூறிவந்த சுமலதா அடிக்கடி நெஞ்சு வலிப்பதாகவும் கூறிவந்துள்ளார். இதனையடுத்து மாரடைப்பு காரணமாகவே சுமலதா உயிரிழந்துவிட்டதாக எண்ணிய குடும்பத்தினர் அவரை தகனம் செய்தனர். 

இந்நிலையில், சுமலதா இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது உயிரிழப்பு கொலை என தேவராஜுக்கு தெரியவந்துள்ளது. தன்னுடைய 5 வயது மகனுடன் பேசிக்கொண்டிருக்கையில் ''அம்மாவை ஒரு மாமா அறைக்குள் அழைத்துச் சென்று அடித்தார்’’ என மகன் தெரிவித்துள்ளான். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தேவராஜ், தன் மகனை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தை நாடியுள்ளார். காவல் நிலையத்தில் தேவராஜின் மகன் தான் பார்த்ததை தெளிவாக கூறியுள்ளான். அதில்,

''ஒருநாள் வெங்கடேஷ் மாமா வீட்டுக்கு வந்தார். அவரும் அம்மாவும் அறைக்குள் சென்றனர். அவர்கள் சத்தமாக பேசி சண்டையிட்டனர். பின்னர் அம்மாவை வெங்கடேஷ் மாமா தலையில் அடித்ததை நான் பார்த்தேன். பின்னர் புடவையால் அம்மாவின் கழுத்தை அவர் நெறித்தார். அம்மா கீழே விழுந்ததும் அவர் வெளியே ஓடிவிட்டார்'' என்று தெரிவித்தான். 

சிறுவனின் சாட்சியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஏற்கெனவே வெங்கடேஷுக்கும் சுமலதாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்திருந்தனர். அதேபோல் சுமலதா இறப்புக்கு பின் வெங்கடேஷ் ஊரில் இல்லை என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து வெங்கடேஷை தேடிய போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் சுமலதாவை கொலை செய்ததாக வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார்.

போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்த வெங்கடேஷ், ''எனக்கும் சுமலதாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. அதனை நிறுத்திக்கொள்ளலாம் என அவர் கூறினார். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் அனைத்தையும் என் குடும்பத்தினரிடம் கூறிவிடுவதாக மிரட்டினார். அதனால் அவரை புடவையால் கழுத்தை நெறித்து கொலை செய்தேன். அவசரத்தில், அருகில் அவரது மகன் இருந்ததை நான் கவனிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறையினர், ''இரண்டு மாதங்கள் கழித்து இது கொலை என தெரியவந்துள்ளது. ஒரே சாட்சியாக 5 வயது சிறுவன் இருக்கிறான். தாயின் இறப்பு குறித்து மீண்டும் மீண்டும் கேட்பது அந்த சிறுவனுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் என்பது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் அவன் ஒருவனே சாட்சி என்பதால் எங்களுக்கு வேறு வழியில்லை'' என தெரிவித்துள்ளனர்.