இந்தியராணுவத்தினர் IANS
இந்தியா

ஜம்மு காஷ்மீர் | ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டர்.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

அக்டோபர் 24 அன்று, பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கின் போடாபத்ரி பகுதியில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

Jayashree A

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. கந்தர்பால் மாவட்டத்தில் ககாங்கிர் பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு திட்ட நிறுவனத்தின் தொழிலாளர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் அக்டோபர் 20 அன்று தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 24 அன்று, பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கின் போடாபத்ரி பகுதியில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இப்படி ஆங்காங்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாடுகளை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்ற நசீர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகியோர் திரும்பி வராத நிலையில் அவர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வியாழன் மாலை சாகிபோரா சோபூர் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அதாவது, ராணுவம், துணை ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் என மூவரும் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

அதன்படி நேற்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டம் சோபூரில் இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. அத்துடன், அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், சம்பவ இடத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.