இந்தியா

'சபரிமலை தந்திரி மாதச் சம்பளம் வாங்குபவர் மட்டுமே' கேரள அமைச்சர் காட்டம்

'சபரிமலை தந்திரி மாதச் சம்பளம் வாங்குபவர் மட்டுமே' கேரள அமைச்சர் காட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக 17 ஆம் தேதி மாலை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தினர். 

19 ஆம் தேதி பெண்ணியவாதியான, ரஹானா பாத்திமாவும் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதாவும் பம்பையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சந்நிதானம் அருகே அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கேரள அரசு உத்தரவுப்படி, போலீஸார் அந்த இரு பெண்களையும் பம்பைக்கே அழைத்துச் சென்றனர். அப்போது மிகவும் பதற்றமான சூழ்நிலை சபரிமலை சந்நிதானத்தில் இருந்தது. அப்போது 18 ஆம் படியின் கீழே தேவஸம் போர்டு உறுப்பினர்களும், மேல்சாந்திகளும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்கள் உள்ளே நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் என சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி ரஜூவரு கண்டராவு எச்சரிக்கை விடுத்தார். “18 ஆம் படிகளில் பெண்கள் நுழைந்தால், கோவில் நடையை மூடிவிடுவேன். நானும் என்னுடைய வீட்டிற்கு சென்றுவிடுவேன். நான் பக்தர்கள் பக்கம் உள்ளேன். கோவிலில் வன்முறை நடைபெறும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. இந்த தருணத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டேன். நான் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறேன். ஆனால், நான் பக்தர்கள் பக்கம்தான். யாருக்கும் எதுவும் நடந்துவிடக் கூடாது. நான் நிற்கதியாக நிற்கிறேன். நான் என் நிலையை திணிப்பதற்கு தயாராக இருக்கிறேன்” என்று உணர்ச்சிப் பொங்க பேட்டியளித்தார் தந்திரி ரஜூவரு கண்டராவு. 

மேலும், அன்றைய தினமே பந்தள ராஜ குடும்பமும் தேவஸம் போர்டு நிர்வாகத்தினருக்கு கடிதம் எழுதினர் அதில், “சபரிமலை கோவிலில் சடங்குகள் ஏதேனும் மீறப்பட்டால், கோவிலை மூடிவிடுங்கள். தந்திரிகளின் ஒப்புதலுடன் மீண்டும் நடை திறக்கப்பட வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டது. இப்போது கேரள அமைச்சர்கள் பந்தள குடும்பத்தையும், தந்திரிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து பேசிய கேரள மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் " ஒரு தந்திரி கோவிலை பூட்டி விடுவேன் என்று எப்படி மிரட்டலாம் ? கோயில் நடையை நினைத்தபோதெல்லாம் மூடுவதற்கு அதென்ன பெட்டிக் கடையா ? இல்ல தந்திரிதான் அதன் உரிமையாளரா ? சரி பந்தள ராஜ குடும்பத்துக்கு தந்திரியை நடையை மூட சொல்வதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது ? என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி கூறுகியைில் " நாம் இப்போது ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம், மன்னர் ஆட்சியொன்றும் நடைபெறவில்லை என்பதை பந்தள ராஜ குடும்பம், தந்திரியும் புரிந்துக்கொள்ள வேண்டும். கோயிலின் நடையை பூட்டி விடுவேன் என்று சொல்லும் தந்திரி மாதச் சம்பளம் வாங்குபவர் மட்டுமே" என தெரிவித்துள்ளார். இந்த இரு அமைச்சர்களின் கருத்துக்கு பதிலளித்துள்ள பந்தள ராஜ குடும்பத்தின் தலைவர் சசிகுமாரா வர்மா "ராஜ குடும்பத்தின் சபரிமலையின் பங்கு குறித்து சந்தேகம் இருக்கும் அமைச்சர்கள் ஆவணங்களை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். அப்போது தெரியும் யாருக்கு அதிகம் உரிமை இருக்கிறது என்று. தந்திரி இதையெல்லாம் அறிந்தவர், அதனால்தான் எங்களின் வேண்டுகோளை ஏற்றார்" என கூறியுள்ளார்.