கரண் பூஷன் சிங் அணிவகுப்பு வாகனம் மோதியதில் உயிரிழந்தவர்கள் ட்விட்டர்
இந்தியா

உ.பி | பிரஜ் பூஷன் சிங் மகன் கரண் பூஷன் சிங்கின் அணிவகுப்பு வாகனம் மோதி 2 சிறுவர்கள் பலி

ஜெனிட்டா ரோஸ்லின்

விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கியவர் பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங். இவரின் மகனும், நடந்துவரும் மக்களவை தேர்தலில் கைசர்கஞ்ச் பகுதியின் பாஜக வேட்பாளருமான கரண் பூஷன் சிங்கின் அணிவகுப்பு வாகனம் இன்று சாலை விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரண் பூஷன் சிங்கி - பிரஜ் பூஷன் சிங்

உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் கைசர்கஞ்ச் தொகுதியின் பாஜக வேட்பாளர் கரண் பூஷன் சிங். இவர் பாலியல் புகாரில் சிக்கிய தற்போதைய எம்.பி பிரிஜ் பூஷண் சிங்கின் மகனாவார். இந்நிலையில் கரணின் அணிவகுப்பு வாகனமானது இன்று உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள கர்னல்கஞ்ச் - ஹுசூர்பூர் சாலையில் உள்ள பைகுந்த் டிகிரி கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கே இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர்.

கரண் பூஷன் சிங் வாகன விபத்து

அந்நேரத்தில் இவரின் அணிவகுப்பு வாகனம் மோதியதில், இரண்டு குழந்தைகள் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயமடைந்தவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விபத்து குறித்த புகாரின் அடிப்படையில், கர்னல்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை விபத்தை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அது இணையத்தில் பரவி, பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய பார்ச்சூனர் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கரண் பூஷண் சிங், விபத்தின்போது வாகனத்தில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட அறிக்கையில், கரண் பூஷணின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கரண் பூஷன் சிங்

34 வயதான கரண் பூஷன் சிங் முன்னாள் பாஜக எம்,பி, பிரிஷ் பூஷண் சிங்கின் இளைய மகனாவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முன் உத்தரப்பிரதேச மல்யுத்த சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மூத்த சகோதரர் பிரதீக் பூஷன் சிங், பாஜக எம்எல்ஏ ஆவார்.