இந்தியா

“எங்களுக்கு ஏழு தொகுதிகள் போதும்” - பெற்ற தொகுதியை திருப்பி கொடுத்த தேவகவுடா

“எங்களுக்கு ஏழு தொகுதிகள் போதும்” - பெற்ற தொகுதியை திருப்பி கொடுத்த தேவகவுடா

webteam

கர்நாடகாவில் எங்களுக்கு 7 தொகுதிகள் போதும் 8 தொகுதிகள் வேண்டாம் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு 20 தொகுதிகளும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. 

ஹாசன் தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா போட்டியிட்டு வந்தார். இப்போது அந்தத் தொகுதியில் அவர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். இதனால் அவர், துமகூரு தொகுதியில் போட்டியிடுகிறார். 

இதனிடையே காங்கிரஸிடம் இருந்து பல போராட்டங்களுக்குப் பிறகு தேவகவுடா இந்தத் தொகுதிகளை பெற்றார். கடந்த ஜனவரியில் மஜத மாநில தலைவர் விஷ்வநாத், காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் கடந்த மாதம் காங்கிரஸ் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபாலை முதல்வர் குமாரசாமி சந்தித்துப் பேசினார்.

அப்போதும் மஜத தரப்பில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 12 தொகுதிகள் கோரப்பட்டன. அதை ஏற்க மறுத்த காங்கிரஸ், 6 தொகுதிகளே ஒதுக்கமுடியும் எனத் தெரிவித்தது. பாஜகவின் சதானந்த கவுடா அங்கு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வலிமையான வேட்பாளர் என்பதால் அங்கு போட்டியிடும் முடிவை கைவிட்ட தேவகவுடா தற்போது தும்கூருவில் போட்டியிட முடிவு செய்துள்ளார். 

இந்நிலையில், கர்நாடக மக்களவைத் தேர்தலில் புதிய திருப்பமாக, பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட தங்களுக்கு சரியான வேட்பாளர் இல்லை எனக் கூறி மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸிடம் திருப்பி கொடுத்து விட்டது. வேட்புமனுத்தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் வலிமையான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. தங்களுக்கு 7 தொகுதிகள் போதும் எனவும் மஜத கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே காங்கிரஸை சேர்ந்த 2 பேர் தேவகவுடாவை எதிர்த்து தும்கூரில் போட்டியிடுகின்றனர். அதற்காக அவர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.