இந்தியா

சொந்த நிலத்தை ரூ. 25 லட்சத்திற்கு விற்று ஏழை மக்களுக்கு உணவளித்த ‘சகோதரர்கள்’ 

சொந்த நிலத்தை ரூ. 25 லட்சத்திற்கு விற்று ஏழை மக்களுக்கு உணவளித்த ‘சகோதரர்கள்’ 

webteam
கர்நாடகாவில் கூலித்தொழிலாளர்களுக்கு உணவளிப்பதற்காக அண்ணன், தம்பி இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை 25 லட்சம் ரூபாய்க்கு  விற்று உதவி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ளது கோலார் மாவட்டம். இங்கு தங்கச் சுரங்கம் இருக்கிறது என்பதால் பலருக்கும் இந்த மாவட்டத்தை சொன்னவுடன் தெரிந்துவிடும். ஆனால் இந்த மாவட்டத்தில் தங்கத்தைவிட இரண்டு தங்கமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் வெளியே தெரிந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதுவும் கூலித் தொழிலாளர்களாக இருப்பவர்களின் நிலைமையைச் சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு மணிநேரத்தையும் அவர்கள் மரண வேதனையில் கழித்து வருகின்றனர்.
 
 
இந்நிலையில்தான் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள தாஜம்முல் பாஷா மற்றும் அவரது சகோதரர் முசம்மில் பாஷா ஆகிய இருவரும் கூலித் தொழிலாளர்களின் பசியைப் போக்குவதற்காக தங்களிடம் இருந்த நிலத்தை 25 லட்சம் ரூபாய்க்கு விற்று அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வாங்கி இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர். 
 
 
இவர்கள் ஏற்கனவே இந்தக் கூலித்தொழிலாளர்களின் உணவு தேவையை போக்குவதற்காக ‘சமூக சமையலறை கூடங்களை’ ஏற்படுத்தி அதில் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.  இது குறித்து தாஜமுல் பாஷா,  "எங்களது பெற்றோர் சீக்கிரமே இறந்துவிட்டார்கள். நாங்கள் கோலாரில் உள்ள எங்கள் தாய்வழி பாட்டி இடத்திற்குக் குடிபெயர்ந்தபோது,  இங்குள்ள இந்து, முஸ்லிம், சீக்கியர் என  எந்த மத வேறுபாடுகளும் இல்லாமல் நாங்கள் வாழ இவர்கள்தான் உதவினர்” என்று கூறியுள்ளார்.
 
இந்தப் பாஷா சகோதரர்கள் வாழை சாகுபடி மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் தொழில் செய்து வருகின்றனர். தாஜம்முல் பெற்றோரை இழந்தபோது அவருக்கு ஐந்து வயது. அவரது உடன்பிறப்புக்கு மூன்று வயது.  ஆகவே இவர்கள் சிக்பாலப்பூரிலிருந்து தங்கள் பாட்டி வசித்து வந்த கோலாருக்கு இடம்பெற வேண்டியிருந்தது. அன்று தாய், தந்தையரை இழந்து இந்த ஊருக்கு வந்த இவர்கள் இருவரும் இன்று  தொழிலதிபர்களாக உள்ளனர்.
 
 
தொடர்ந்து பேசிய இந்தச் சகோதரர்கள், "நாங்கள் வறுமையில் வளர்க்கப்பட்டோம். அனைத்து சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களின் ஆதரவின் காரணமாக நாங்கள் உயிர் பிழைத்தோம். ஆகவே நிலத்தை விற்பதற்கான ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டு, நிலத்தை விற்று அந்தப் பணத்தை எங்கள் நண்பரிடம் ஒப்படைத்துள்ளோம்” என்று  தெரிவித்துள்ளனர். இதுவரை இவர்கள்  3,000க்கும் மேலான குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களைக் கொடுத்து உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.