கொரோனாத் தொற்று 2-வது அலை குறித்து அரசை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துகளை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் 2-வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. சூழ்நிலையை அரசு சரியாக புரிந்து கொண்டு செயலாற்றாமல் இருந்ததே கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம் என ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அரசை விமர்சித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கொரோனாத் தொற்று குறித்த தவறான தகவல் மற்றும் பயத்தை பரப்பும் வகையில் பதிவிடப்பட்ட ப்பதிவுகளை நீக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து ட்விட்டர் நிறுவனம் கூறும்போது, இந்திய அரசு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தவறான தகவல் பரப்பிய ட்விட்டர் கணக்களார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கணக்காளர்களின் விவரங்களை தர முடியாது” என்று கூறியுள்ளது.
ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, “இது ஒரு சட்டப்பூர்வமான கோரிக்கை. கணக்காளரின் பதிவு ட்விட்டர் விதிகள் மற்றும் உள்ளூர் விதிகள் கொண்டு அலசப்படும். அந்தப்பதிவு ட்விட்டர் விதிகளை மீறும் வகையில் இருந்தால் அந்த பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கப்படும். ஒரு வேளை அந்தப்பதிவு ட்விட்டர் விதிகளை மீறாமல், அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அதிகார வரம்பில் பதிவு சட்டவிரோதமானது என்று தீர்மானிக்கப்பட்டால் அந்தப்பதிவு இந்தியாவில் மட்டும் நீக்கப்படும்” என்று கூறியுள்ளது.
அதன்படி தற்போது கொரோனா பரவல் குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட 50-க்கும் மேற்பட்ட ட்விட்டர் பதிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் தெலங்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க அமைச்சர் மோலோய் கதக், நடிகர் வினீத் குமார் சிங் உள்ளிட்டோரின் பதிவுகளும் அடங்கும்.