இந்தியா

பிறப்பையும் இறப்பையும் ஒன்றாய்ச் சந்தித்த இரட்டையர்கள்.. ராஜஸ்தானில் நடந்த சோக விநோதம்!

பிறப்பையும் இறப்பையும் ஒன்றாய்ச் சந்தித்த இரட்டையர்கள்.. ராஜஸ்தானில் நடந்த சோக விநோதம்!

PT

ராஜஸ்தானைச் சேர்ந்த இரட்டையர்கள் ஒரேநேரத்தில் ஒன்றுபோல மரணத்தைத் தழுவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுமேரும், சோஹன் சிங்கும் இரட்டையர்கள் ஆவர். இருவரும் 26 வயது இளைஞர்கள். ஆனால் இருவரும் தற்போது வெவ்வேறு மாநிலங்களில் இடம்பெயர்ந்து இருந்தனர். சுமேர், குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சோஹன், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக ஜெய்ப்பூரில் பயிற்சி எடுத்து வந்தார். அதாவது, அவர்கள் இருவரும் 900 கி.மீட்டர் தொலைவில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி, சுமேர், கடந்த புதன்கிழமை குடும்பத்தினருடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்துள்ளார்.

இந்தச் செய்தி குறித்து அறிந்து வீட்டுக்கு வந்த சோஹனும், மறுநாள் (ஜனவரி 12) அதிகாலை குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்துள்ளார். இருவரின் உடல்களுக்கும் ஒன்றாக இறுதிச் சடங்கு நடத்தி முடிக்கப்பட்டது. இரட்டைச் சகோதரர்கள் ஒரேநேரத்தில் ஒன்றுபோல மரணத்தைத் தழுவியிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. எனினும், சோஹன் இறப்பு, தற்கொலையாக இருக்கலாமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

- ஜெ.பிரகாஷ்