உத்தராகண்ட் மாநிலம் தெஹ்ரி நரேந்திர நகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து 20 நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினசரி வழக்கமான சோதனைக்காக சனிக்கிழமை இரவு கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள வார்டுகளை மருத்துவர்கள் பார்வையிட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது என்று தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் நிராஜ் ராய் தெரிவித்தார்.
அங்கு முப்பத்தெட்டு பேர் சிகிச்சை பெற்று வந்தனர், அவர்களில் 20 பேர் காணாமல் போயுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி சுமன் ஆர்யா தெரிவித்தார். தப்பிச் சென்றவர்களில் இருவர் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்களில் ஏழு பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள், மேலும் உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ஒடிசாவை சேர்ந்தவர்கள் தலா நான்கு பேர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
காணாமல்போன நோயாளிகள் மீது பேரிடர் மேலாண்மை மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக நரேந்திர நகர் எஸ்.எச்.ஓ சாந்தி பிரசாத் திம்ரி தெரிவித்தார்.