தவெக தலைவர் விஜய் இரங்கல் முகநூல்
இந்தியா

"மனவேதனை அளிக்கிறது"- தவெக நிர்வாகி சரவணன் மறைவுக்கு விஜய் இரங்கல்

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணனின் மறைவு அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணனின் மறைவு அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு 47 வயது. மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இளமைக்காலம் முதலே விஜய்யின் தீவிர ரசிகரான இவர், தற்போது தவெகவின் புதுச்சேரி மாநில செயலாளராகவும், புதுச்சேரி என் ஆனந்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்துள்ளார். கட்சிப்பணிகளில் மிகுந்த ஆர்வமுடன் பணியாற்றியும் வந்துள்ளார்.

வருகின்ற 27-ஆம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இதற்கான, பணிகளை தீவிரமாக கவனித்து வந்துள்ளார் சரவணன். பல நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில்தான், புதுச்சேரி திரும்பிய அவருக்கு நேற்று (21.20.2024) மாலை வீட்டில் இருந்தபோது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சரவணனை சோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேள்வியுற்று, சரவணனின் உடலுக்கு, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது சரவணன் உடலைப் பார்த்து ஆனந்த் கதறி அழுதார்.

இந்தநிலையில், அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக விஜய் கூறியிருக்கிறார்.

இது குறித்த x பதிவில், “ தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி. புதுச்சேரி சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். மேலும் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட விஜய் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக சரவணன் உயிரிழந்தது, தவெக கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.